தனது வயிற்றுப்பிழைப்பான விவசாயத்துக்காக டிராக்டர் வாங்க வங்கியில் கடன் பெற்ற விவசாயி அடித்து உதைக்கப்பட்டிருக்கிறார்.
தஞ்சாவூர் சோழன்கரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன் தனியார் வங்கி ஒன்றில் கடன் பெற்று டிராக்டர் வாங்கினார். கடந்த இரண்டு மாதமாக தவணைத் தொகைகட்டாததால் வங்கி, உயர்நீதிமன்றத்தில் வண்டியை கைப்பற்ற உத்தரவு பெற்றது.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் டிராக்டரை பறிமுதல் செய்ய பாலனின் நிலத்துக்குச் சென்றனர்.
அப்போது பாலன், அறுவடை முடிந்ததும் நான்கு நாட்களில் டிராக்டரை தானே வந்து ஒப்படைத்துவிடுவதாக கூறியிருக்கிறார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த காவலர்கள் அவரை அடித்து, உதைத்து இழுத்துச் சென்றார்கள். இது குறித்து ஒரத்தநாடு டிஎஸ்பி செங்கமலக்கண்ணனை தொடர்பு கொண்டு கேட்டபோது, “விவசாயியை காவல்துறையினர் அடிக்கவே இல்லை. அவர்தான் காவலர்களை தரக்குறைவாக பேசினார். உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலே இதைச் செய்தோம்” என்றார்.
அவரிடன் “வீடியோவில் அடிக்கும் காட்சி பதிவாகியுள்ளதே” எனக் கேட்டதற்கு, “காவலர்கள் எந்த விதிமீறலையும் செய்யவில்லை” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தார்.
இந்த நிலையில்தான் வங்கிகளில் ஆறாயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி ஏமாற்றிய விஜய் மல்லையா, ஹாய்யாக வெளிநாடு பறந்துவிட்டார் என்று செய்திகள் வருகின்றன.
விவசாயி அடித்து உதைக்கப்படும் காட்சி: (நன்றி: புதிய தலைமுறை தொலைக்காட்சி)