AAMIR_001jpg
ஆமிர்கான் சொன்னது சரியா? தவறா ?
சரி.என்றால் இந்த நாட்டில் சகிப்புத்தன்மை இல்லையா?

தவறு என்றால் இங்கு எல்லாம் சரியாக இருக்கிறதா ?

அத்தனை தெளிவாய் இதற்கு விடை கிடையாது.

சகிப்புத்தன்மை குறைந்து வருவது குறித்து அவரது கருத்து …அவருடைய கருத்து. அதில் நீங்கள் மாறுபடலாம். தவறில்லை.

ஆனால் அதற்காக “நாட்டை விட்டு போய்விடலாம்” என்று அவரது மனைவி கூறியதாக சொன்னது தவறு.

காரணம். அமீர்கான் ஒரு சாதாரண தெருவில் போகும் மனிதரல்ல. பல கோடி மக்களால் உலகெங்கிலும் கவனிக்க படும் நபர். .

இவர் தன் சொல்லாலும் செயலாலும் பல கோடி மக்களை தூண்ட முடியும் என்கிற காரணத்தில் தானே அந்த விளம்பர நிறுவனங்கள் இவருக்கு கோடிக்கணக்கான பணத்தை கொட்டுகின்றன?

அந்த ஒரே தகுதியினால்தான் இன்றைய அரசும் இவரை “ஸ்வாட்ச் பாரத்” தூதுவராக நியமித்தது?

இத்தகைய பொறுப்பான மனிதர் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் பேச வேண்டும்.

சகிப்புத்தனமை குறைவது பற்றி சொன்னது தப்பில்லை.
ஆனால் அதற்காக நாட்டை விட்டு போக எண்ணம் இருப்பதாக மறைமுகமாக சொல்வது தவறு.

இவரது மனைவிக்கு இருக்கும் பாதுகாப்பின்மையை பற்றிய பயம் இந்த நாட்டில் இருக்கும் பல கோடி குடும்பத்தினருக்கு இருக்கலாம். அவர்களெல்லாம் நாட்டை விட்டு போகிறேன் என்றா சொல்கிறார்கள்?

சரி..திருமதி. கிரண்ராவ் ஆமீர்கான் எந்த நாட்டுக்கு போவார்கள்?
எந்த நாடு சகிப்புத்தன்மையில் இந்தியாவை விட சிறப்பாக பணியாற்றுகிறது?

இந்தியாவுக்கு வெளியே இவர்கள் மிகவும்சாதாரண மனிதர்களே..அதிமுக்கிய வி.வி. ஐ. பி.க்கள் அல்ல.

வெறும் இந்தியர்களாகவே பார்க்கப்படுவார்கள்.

சாதாரண இந்தியர்கள் உலகெங்கும் பல சமயம் எதிர் கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றி இவருக்கு தெரிய வாய்ப்பில்லை.

நிறவெறி எங்கும் இவர்களை துரத்தும். புகார் செய்ய இடமிருக்கு என்கிற ஒரு – ஒரே ஒரு சமாதானம் மட்டுமே.

சும்மா தெருவில் நடந்து சென்ற இந்திய மாணவர் எந்த வித காரணமும் இன்றி அவரது நிறத்திற்காகவே சுட்டுக்கொல்லப்பட்டது ஆமீர் குடும்பத்துடன் அடிக்கடி வந்து போகும் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில்தான்.

இன்றும் ROCHDALE / ROTHERHAM நகரத்தில் இந்திய பாகிஸ்தானிய இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர்.

ஆஸ்தேர்லியா – கேட்கவே வேண்டாம். நான் அறிந்து 2007 முதல் அங்கு இந்தியர்களின் மீது நடந்த தாக்குதலினால் எழுந்த பிரச்சனைகள் நாடறியும். அந்த நாட்டு பிரதமரே இந்தியா வந்து மன்னிப்பு கேட்கவேண்டிய சூழல் அங்கு.

அமேரிக்கா – அங்கு இன்னுமும் ஒருவன் கருப்பு நிறத்தவன் என்கிற ஒரே காரணத்திற்காக கேள்வியே கேட்காமல் சுட்டு கொல்லும் காவல்துறை.

ஐரோப்பா – பிரான்சில் நடந்த படுகொலைக்கு பிறகு அங்கு இஸ்லாமியர்களுக்கு என்ன மரியாதை கிடைக்கபோகிறது என்று இனிமேல்தான் தெரியும்.

இப்படி வசதியாக வாழக்கூடிய எந்த நாட்டிலும் இன்று நிலைமை கவலைக்கிடமே..

ஆக கிரண்ராவ் எங்கு செல்வார்?

இரண்டு இடம் உண்டு. ஒரு சவூதி…அங்குள்ள கட்டுப்பாடுகளுக்கு கிரண் நரகத்தையே தெரிவு செய்வார். உயிருக்கு பயந்து ஓடும் இஸ்லாமியர்களே சவுதிக்கு ஓடுவதில்லை.

இரண்டாவது- துபாய்…இது கொஞ்சம் சரியாக வரும்.
காரணம் இங்கு சொகுசும் உண்டு. இங்குள்ள இந்திய அப்பாவிகளுக்கு இவர்களை அடையாளமும் தெரியும். ஆக தன். அதிமுக்கிய வி.வி.பி. அந்தஸ்தையும் தக்கவைத்துக்கொள்ள முடியும். அனால் இங்கும் அரபிக்களுக்கு அடுத்த இடம்தான் கிடைக்கும். அரச வம்சத்தை கொஞ்சம் விமர்சித்தாலும் கேள்வியே கேட்காமல் தொட்டி தான்.

நான் சொல்வது இதுதான். – சகிப்புதன்மை குறைகிறது என்பதை சொன்னதில் ஆமிர் தவறு செய்யவில்லை.
அதற்கு எதிராக குரல் கொடுப்பதிலும் தவறு இல்லை.
ஒரு இந்தியராக அது அவரது கடமை கூட…
ஆனால் நான் இதற்காக ஓடுவேன் என்று கமல் போல் மிரட்டுவது தவறு…தவறு…தவறு..

இவர் நின்று போராடாவிட்டால் வேறு எந்த எளிய மனிதரால் (அது இந்துவோ..இஸ்லாமியரோ) முடியும்?

படத்தில் சொன்னதை நேரில் காட்ட சந்தர்ப்பம் வந்துள்ளது என்று நீங்கள் நினைத்தால் வாங்கள்..நாங்கள் துணை வருகிறோம்…போராடுவோம்!

Ravi Sundaram