அமைச்சரின் அந்தரங்க படம் இப்போது இணையம் முழுதும் பரவி விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், போராட்டத்தில் உயிர் இழந்த மாற்றுத்திறனாளியை பற்றி சமூக வலைதளங்களில் பேசப்படவில்லையே என்று தனது ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார் எழுத்தாளரும், திமுக பேச்சாளருமான மனுஷ்யபுத்திரன்.
அவரது முகநூல் பதிவு:
“மாற்றுத்திறனாளி ஒருவர் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இறந்துபோயிருக்கிறார். நியாயமாக இன்று சமூகவலைத்தளங்களில் பேசப்படவேண்டிய விஷயம் இதுதான். ஆனால் அமைச்சர் ஒருவரின் அந்தரங்க புகைப்படம் பரவவிடப்படுகிறது. அதைப்பற்றிய பேச்சுக்கள் தீயாக பரவுகின்றன. பின்னர் அமைச்சருடன் இருப்பவர் அவரது மனைவிதான் என்று மற்றொரு மறுப்பு புகைப்படம். எப்படியோ ஒரு நாள் கழிந்தது.
யார் யாரோடு இருந்தால் என்ன, எந்த கெட்டவார்த்தை பாட்டு வந்தால் என்ன? மக்களின் எரியும் பிரச்சினைகள் உச்சத்திற்கு செல்லும்போதேல்லாம் தமிழர்கள் ஒரு கிளுப்பான சர்ச்சைக்குள் வழிநடத்தப்படுகிறார்கள். இணையம் இதற்கு ஒரு கருவி. நாம் எதைப்பேச வேண்டும் அல்லது எதை பேசக்கூடாது என்பதை யாரோ முடிவு செய்கிறார்கள்”.
- இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார் மனுஷ்யபுத்திரன்.
உயிரிழந்த மாற்றுத்திறனாளி
அரசு பணிகளில் 3 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்பது உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களில் குப்புசாமி என்ற மாற்றுதிறனாளி திடீரென மயக்கம் அடைந்தார். இதையடுத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் ஒரு மாற்றுத்திறனாளி, மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.