அமேதி
அமேதி தொகுதி பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான ஸ்மிரிதி இரானி அமேதியில் வாக்கு சாவடி கைப்பற்றல் முயற்சி நடப்பதாக புகார் கூறி உள்ளார்.
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் மக்களவை தொகுதிகளில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியும் ஒன்றாகும். இந்த தொகுதியிலும் கேரள மாநில வயநாடு தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி போட்டியிட்டு வருகிறார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிரிதி இராணி, “அமேதி தொகுதியின் பல இடங்களில் வாக்கு சாவடிகளை கைப்பற்ற முயற்சிகள் நடந்துள்ளன. இது குறித்து நான் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்துள்ளேன். அவர்கள் இதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள். மக்கள் இது போல அரசியல் நடத்துவதற்காக இன்றே ராகுலுக்கு தண்டனை அளிப்பார்கள்.
இதற்கு காங்கிரஸ் பொது செயலர் பிரியங்கா வதேரா காந்தியும் ஒரு காரணம் ஆவார். ஐந்து வருடம் முன்பு பிரியங்காவுக்கு எனது பெயர் கூட தெரியாது. ஆனால் தற்போது அவர் தனது கணவர் பெயரை விட எனது பெயரை அதிகம் அழைக்கிறார்.” என தெரிவித்துள்ளார்.
இதற்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜீஷன் ஹைதர், “பாஜக வேட்பாளரன ஸ்மிரிதிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. தனது தோல்விக்கு இப்போதே காரணம் தேட தொடங்கி விட்டார். ராகுல் காந்தியால் வாக்குச்சாவடிகளையோ வாக்குகளையோ கைப்பற்ற முடியும் என்றால் தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது?” என கேட்டுள்ளார்.