பலநூறு வருட பாரம்பரியம் நமது நாட்டுக்கு உண்டு என்று பெருமைப்பட்டுக்கொள்கிறோம். ஆனால் பாரம்பரிய பெருமை சொல்லும் அருங்காட்சியங்கள் குறைவு. அதுவும் சரிவர பராமரிப்பதில்லை. அது மட்டுமல்ல.. அங்கு சென்றால், அதைத் தொடாதே இதைத் தொடதே என்பார்கள்.
ஆனால் அமெரிக்காவில் நிலைமையே வேறு.
அமெரிக்காவின் ஒவ்வொரு அதிபரின் பதவிக் காலம் முடிந்ததும், அவர் பிறந்த மாநிலத்தில் அவரது பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்படுவது கடந்த இரு நூற்றாண்டு கால வரலாறு.
இந்த அருங்காட்சியகத்தில் அவர் கால சாதனைகள், முக்கிய நிகழ்வுகள், அமெரிக்கா தொட்ட உயரங்களை, உலக நாடுகளுடனான உறவுகளை படங்களாக, காணொளிகளாக, நினைவுச் சின்னங்களாக வைத்திருப்பார்கள்.
ஈராக் போர் புகழ் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுக்கு (ஜூனியர்) டல்லாஸ் நகரின் சதர்ன் மெத்தடிஸ்ட் பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு பிரமாதமான அருங்காட்சியகம் அமைத்திருக்கிறார்கள்.
ஆட்சிக் காலத்தில் அவர் எவ்வளவு கெட்ட பெயர் வாங்கினார் என்று தெரியாத ஒருவர் இந்த அருங்காட்சியகத்தைப் பார்த்தால் அவரைக் காதலிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி ஒரு அருமையான தொகுப்புகள்.
9/11 தாக்குதலில் சிதைந்த இரட்டைக் கோபுரத்தின் மிச்சமான இரு உயர்ந்த இரும்பு தளவாடங்களைப் பார்த்தபோது மனத்திரையில் அந்த பயங்கரவாத நிமிடங்கள் ஓடி மறைந்தன.
இந்த அருங்காட்சியகத்தில் அதிபரின் வெள்ளை மாளிகையின் ‘ஓவல் அலுவலக அறை’யை அச்சு அசலாக அப்படியே (Replica) அமைத்திருக்கிறார்கள். அதே மாதிரி மேசை, நாற்காலி, ஹாட்லைன் போன், பின்னணியில் அமெரிக்கக் கொடிகள், அதிபர் அறையில் உள்ள அதே பொருட்களின் பிரதிகள், இந்தப் பக்கம் ஆபிரகாம் லிங்கன், அந்தப் பக்கம் மார்டின் லூதர் கிங் (ஜூனியர்), அதே போன்ற வண்ணத்தில் தரத்தில் இருக்கைகள், வெளியோ ரோஜாத் தோட்ட நுழைவு வாயில்… அச்சு அசலாக அதிபர் அறை.
இந்த அறையில் பார்வையாளர்களுக்கு தாராள அனுமதி மட்டுமல்ல, சில நிமிடங்கள் அதிபர் நாற்காலியில் அமர்ந்து, அந்த ஹாட்லைன் தொலைபேசியில் பேசுவது போல போஸ் கொடுத்து படமும் எடுத்துக் கொள்ளலாம். போனை எடுக்க மறந்தால், அந்த அறையின் பாதுகாவலரே வந்து, ‘ஹே, போனை எடுத்து பேசுங்கள்’ என்கிறார்.
அமெரிக்காவின் வரலாறு இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளுக்குள் அடங்கிவிடக் கூடியது. அதை உணர்ந்து தங்களுக்கான பெருமைக்குரிய பாரம்பர்யத்தை உருவாக்குவதில் அத்தனை சிரத்தை காட்டுகிறார்கள். அதற்கு மக்களும் அருமையாக ஒத்துழைக்கிறார்கள்!
* அங்குள்ள புகைப்படக் கலைஞர் எடுத்துத் தந்த படம் இது. கட்டணம் 20 டாலர்கள், பிப் 10, 2016.
Vino Jasan