இந்திய பட்ஜெட்டில், முதன்முறையாக, யுனிவர்சல் பேசிக் இன்கம் (யு.பி.ஐ.) எனப்படும் அனைவருக்கும் அடிப்படை சம்பளம் குறித்து பேசப்பட்டிருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்நாளான ஜனவரி 31ம் தேதி, நாடாளுமன்றத்தில், 2016-17ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில்தான் இந்த யு.பி.ஐ. பற்றி பேசப்பட்டிருக்கிறது. ஆய்வறிக்கையில், சமூகநீதி மற்றும் உற்பத்தி சார்ந்த பொருளாதாரம் குறித்த சிந்தனையில் யு.பி.ஐ ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
யு.பி.ஐ என்றால் என்ன?
21ம் நாற்றாண்டில், அமோக தொழில்வளர்ச்சியின் காரணமாக, தானியங்கி உற்பத்தி முறை அதிகரித்துள்ளது. இதனால் சமூகத்தில் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரிக்கிறது. அதைத் தொடர்ந்து கலவரங்களும் வெடிக்கின்றன.
இந்த பிரச்னைகளை தவிர்க்க, அதாவது வேலைவாய்ப்பைப் பெருக்கி, மக்களின் வாங்கும் திறனை அதிகரிப்பதற்காக, பொருளாதார நிபுணர்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனை இது. 21ம் நாற்றாண்டின் பொருளாதார சிந்தனைகளில் இது முக்கியமானதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த திட்டத்தின்படி,
1. ஒரு குறிப்பிட்ட கால இடைவெ ளியில் அதாவது மாதாமாதம் அல்லது வாராவாரம் பணம் கொடுக்கப்படும்
2. பொருட்களாக கொடுக்காமல் பணமாக மட்டுமே கொடுக்கப்படும்
3. குடும்பங்களுக்கு பதிலாக தனிநபருக்கு பணம் கொடுக்கப்படும்
4. வறுமைக் கோட்டிற்கு கீழ் அல்லது மேல் என்ற எந்தவித பாகுபாடுமின்றி அனைவருக்கும் வழங்கப்படும்
5. இந்த பணத்திற்கு பதிலாக இந்த வேலை செய்ய வேண்டும் என்பது போன்ற எந்தவித நிபந்தனையுமின்றி தரப்படும்
இந்தியாவில் இந்த திட்டத்தால், என்ன பயன்?
இந்தியாவில், 130 கோடி மக்கள் தொகை. இதில் வறுமையில் உழல்பவர்களின் எண்ணிக்கை, 30 சதவீதம். இந்த திட்டத்தால், 0.5 சதவீதம் வறுமை ஒழியும். இந்த 0.5 சதவீத வறுமை தான், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4 முதல் 5 சதவீதம் செலவு வைக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக உள்ள நிலையில், அதற்கும் குறைந்த சதவீத த்தில் தான் வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.
வறுமை ஒழிப்பின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். அதன் மூலம் மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். இந்த சுழற்சி பொருளாதாரத்தில் முக்கியமான அம்சம்.
இந்தியாவில், ஏழை மக்களுக்காக அமல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள், சரியான பயனாளிகளுக்குப் போய்ச் சேருவதில்லை. அதைத் தடுத்து உரிய பயனாளிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் கணிசமான நன்மைகளை கொண்டு சேர்க்க முடியும்.
இப்போது இந்த திட்டம் அமல்படுத்த வாய்ப்புள்ளதா?
யு.பி.ஐ. திட்டம் தற்போதைக்கு அமல்படுத்தப்படும் வாய்ப்பு மிகமிக க் குறைவு என்பதை சுட்டிக் காட்டியுள்ள பொருளாதார ஆய்வறிக்கை, புரையோடிப் போயிருக்கும் ஊழல், அரசியல்வாதிகளின் எதிர்ப்பு, அரதப் பழசான சட்டங்கள், அதிகாரவர்க்கத்தின் கெடுபிடி ஆகிய சவால்களைத் தாண்டி எதிர்காலத்தில் அமல்படுத்துவதற்கான தேவை இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், இந்த திட்டத்தின் ஒரு அம்சமான, அனைவருக்கும் என்பதை, வறுமையில் வாடும் மக்களுக்கு என்பதாக மாற்றிக் கொள்ளலாம் என ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது.
பின்லாந்து நாட்டில், வேலையில்லாமல் திண்டாடும் 2,000 பேருக்கு ஒரு சிறிய நிதியுதவி, வழங்கும் திட்டம் ஜனவரி மாத தொடக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு தொடரும் இந்த திட்டத்தால், கிடைக்கும் பலனை அடுத்து, அடுத்தகட்ட ஆய்வுகள் நடக்கலாம் என தெரிகிறது.
இந்தியாவிலும் இதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை, அரசே பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தும் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் சொல்லாமல் சொல்லி வருகிறது.