download
 
 
“பொதுவாக தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள் தந்தையை “அத்தா” என்றோ “வாப்பா” என்றோ அழைப்பார்கள். கொங்கு மண்டல மாவட்டங்கள், டெல்ட்டா மாவட்டங்களான மத்திய மண்டல மாவட்டங்களில் உள்ள இஸ்லாமியர்கள் அத்தா எனவும் தென் மண்டல இஸ்லாமியர்கள் வாப்பா எனவும் அழைப்பார்கள்.
இவ்விரு வார்த்தைகளும் அரபு அல்லது உருது வார்த்தைகள் என்ற எண்ணம் பிற மதத்தினருக்கு மட்டுமல்ல இஸ்லாமியர்களிலேயே பலருக்கும் உண்டு
ஆனால் இந்த இரு வார்த்தைகளும் சுத்த தமிழ் வார்த்தைகள். அப்பர் பெருமான் சிவபெருமானை விளிக்கும் போதெல்லாம் தந்தையே என்பதற்காக “அத்தா” என்றே பாடல் முழுதும் அழைப்பார். உதாரணமாக இந்தப் பாடலைக்கூட சொல்லலாம்..
“அத்தா உன் அடியேனை என்பால் ஆர்த்தாய்
அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்
எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனன் அத்தனையும் பொறுத்தாயன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே”

ஆணம்(குழம்பு), ஏணம்(பாத்திரம்), வெஞ்சணம்( கூட்டு,பொறியல்) குப்பாயம், சொக்காய், தேத்தண்ணி(டீ) போன்ற இன்னும் பல வழக்கில் இல்லாத நல்ல பல தமிழ் சொற்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்ட  இஸ்லாமியர்களின் வீடுகளில் இன்றைக்கும் புழக்கத்தில் இருக்கின்றது.
இன்னும் சற்று பெருமையாகவே சொன்னால் பெரும்பாலான தமிழ் தாய்மொழி இஸ்லாமியர்களின் பேச்சில் பெரும்பாலும் ஆங்கிலக் கலப்பிருக்காது. இஸ்லாம் எங்கள் வழி.இன்பத் தமிழ் எங்கள் மொழி!”

  •   M.m. Abdulla   (முகநூல் பதிவு)