v

மதுரை: “குடிநீர், மின்சாரம் எதுவும் இல்லாமல் தமிழக மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில் உலக முதலீட்டாளர் மாநாடு தேவையா?”  என்று கேள்வி எழுப்பியுள்ளார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.

மதுரை அருகே உள்ள பாசிங்காபுரத்தில் நேற்று இரவு தே.மு.தி.க. சார்பில் நல உதவிகள்  வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசினார்.

அப்போது அவர், “மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு தமிழக அரசு தேவையற்ற இடையூறுகளை தருகிறது. அவருக்கு வேண்டிய உதவிகளை இனியாவது தமிழக அரசு செய்ய வேண்டும்.

மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து தராத மதுரை மாநகராட்சிக்கு, தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்து  உள்ளது. தமிழகத்தில் குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை… இப்படி அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.  இந்த நிலையில்ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தேவையா? உலக முதலீட்டாளர் மாநாட்டை ஏன் நடத்துகிறீர்கள்?

குடிக்க தண்ணீர் இல்லை…  கரண்ட் இல்லை என்பதைச் சொன்னால், “வானத்தில் மின்வெட்டு இருக்கலாம்.. தமிழ்நாட்டில் மின்வெட்டு இருக்காது.. வேணும்னா பாக்ஸில் கைய விட்டு பாரு” என்கிறார் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்” என்ற விஜயகாந்த், அதன் பிறகு ஆவேசமாக, “நத்தம்…  யாரைப் பார்த்து கரண்ட்டுக்குள் கைய விட சொல்ற… என் மக்களைப் பார்த்து நீ என்னய்யா கரண்ட்டுக்குள்ள கைய விட சொல்ற.. இதை சொல்றதுக்கு நீ ஒரு அமைச்சரா? நீ கைய விட்டு பாருய்யா அப்பதான் தெரியும்..” என்றார்.