வாஷிங்டன்:
பிரேசிலில் ஆயிரகணக்கான குழந்தைகளுக்கு மூளை பாதிப்பு நோயை உருவாக்கிய ‘ஸிக்கா’ கிருமி தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. கொசு மூலம் உற்பத்தியாகும் இந்த கிருமி கனடா மற்றும் சிலேயை தவிர இதர இடங்களில் பரவி வருகிறது என உலக சுகாதார மையம் கடந்த திங்கள் கிழமை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் இது நாள் வரை இந்த நோய் தாக்குதல் இல்லாமல் இருந்தது. சமீபத்தில் பிரேசிலை சேர்ந்த ஒரு பெண் மூளையில் பாதிப்புள்ள குழந்தையை அமெரிக்கா ஹவாலி மாநிலத்தில் பெற்றெடுத்தபோது தான் ஸிக்கா நோய் தாக்குதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
‘‘வழக்கமான அளவில் இருந்து குறைவான அளவுள்ள மூளையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு ஸிக்கா நோய் இருக்கிறது’’ என பிரேசில் சுகாதார துறை தெரிவித்துள்ளது. பிரேசிலில் மட்டும் 3 ஆயிரத்து 893 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு முதல் இது 30 மடங்கு அதிகரித்துள்ளது.
பிரேசிலில் உள்ள பெர்னாம்புகோ மாநிலம் தான் மோசமாக 1 முதல் 2 சதவீத பிறக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ‘‘மேற்கு ஆப்ரிக்காவில் தோன்றிய எபோலா நோய் எப்படி உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதோ அதேபோன்ற அச்சுறுத்தலை ஸிக்கா ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மருந்து, தடுப்பூசியோ இது வரை ல்லை. அதனால் இதற்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தடுப்பூசி கண்டுபிடித்தாக வேண்டும்’’ என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக உலக சுகாதார பேராசிரியர் டுருடி லாங் கூறியுள்ளார்.
‘‘ ஒரு முறை செலுத்தும் மருந்தும் மூலம் இதற்கு தீர்வு ஏற்படாது. தொடர்ந்து மேலும் மேலும் செலுத்தும் வகையிலான மருந்தை மருந்து உற்பத்தி நிறுவங்கள் பிரத்யேகமாக சிறப்பு திட்டத்துடன் கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்’’ என அமெரிக்காவின் தேசிய சுகாதார மைய இயக்குனர் பிரான்சிஸ் காலின்ஸ் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளை தான் இந்த கிருமி குறி வைத்து தாக்குகிறது. அதனால் குழந்தை பெற்றெடுக்கும் பருவமடையும் பெண்களுக்கு தீவிரமாக இந்த நோய் குறித்து பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா, மஞ்சல் காய்ச்சல் நோய்கள் போல இதுவும் கொசு கடி மூலம் உருவாக கூடியது. முதலில் இந்த நோய் 1947ம் ஆண்டு உகாண்டாவில் ஒரு குரங்கிடம் இந்த கிருமி தாக்குதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஸிக்கா காடு பகுதியில் இதை முதலில் கண்டுபிடித்ததால் இதற்கு ஸிக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆப்ரிக்கா, தென் கிழக்கு ஆசியா, பசிபீக் தீவுகள் வழியாக கடந்த ஆண்டு பிரேசிலில் பரவியுள்ளது. தற்போது அமெரிக்கா மற்றும் கரிபீயன் தீவுகளிலும் இந்த கிருமியின் தாக்கம் இருக்கிறது. காய்ச்சல், சொறி, மூட்டு வலி, சிவந்த கண்கள் போன்றவை ஒரு வாரத்திற்கு மேல் இருந்தால் இந்த நோய்க்கான அறிகுறியாகும்.