ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடையை கோரிக்கை வைத்த 260க்கும் அதிகமான அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதாக விக்டோரியா மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.
தஞ்சமடைய வந்த அகதிகளை, பசிஃபிக் பெருங்கடலிலுள்ள ஆஸ்திரேலிய அரசின் குடிவரவு மையங்களுக்கு அந்நாட்டு அரசு அனுப்ப இருந்தது. இது, ஆஸ்திரேலிய பெருந்தீவுக்கு அருகில் உள்ள சிறு தீவான நவ்ரூவில் இருக்கிறது.
இந்த நிலையில், “அகதிகளை நவ்ரூ தீவுக்கு அனுப்ப வேண்டாம்” என ஆஸ்திரேலியப் பிரதமருக்கு, விக்டோரியா மாநில முதல்வர் டானியேல் ஆண்ட்ரூஸ் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “தஞ்சமடைய வந்த அகதிகளை, நவ்ரூ தீவில் உள்ள குடிவரவு மையங்களுக்கு அனுப்பினால் அவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியான பாதிப்பு ஏற்படும்” என்றுகுறிப்பிட்டுள்ளார்.
மேலும், “விக்டோரியா மாநில அரசு அகதிகளுக்கு வீடு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன், ஆஸ்திரேலியப் பெருந் தீவுக்கு வெளியேயுள்ள குடிவரவு முகாம்களில், அகதிகள் தங்கவைக்கப்படக்கூடாது என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஆஸி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனால் அகதிகள் அதிர்ச்சி அடைந்திருந்தனர். இந்த நிலையில் விக்டோரியா மாநில முதல்வர் மூலம் அகதிகளுக்கு புதுவாழ்வு கிடைத்துள்ளது.