லேட் வாசன்

Must read

vasan
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த பிறகு, அக் கட்சியிலிருந்து விலகி  த.மா.காவை மீண்டும் உருவாக்கினார் வாசன். வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்காமல் இருந்தார். அ.தி.மு.க. கூட்டணியில் சேர அவர் தொடர்ந்து முயற்சித்து வந்ததாக சொல்லப்பட்டது.
யாருடன் கூட்டணி என்று ஜி.கே. வாசனிடம் கேட்டபோதெல்லம், “வெல்லும் கட்சியுடன் கூட்டணி” என்பது போல பொத்தாம் பொதுவாக பேசி வந்தார்.
ஆனால் நீண்ட காத்திருப்புக்குப் பிறகும் அ.தி.மு.க. அணியில் அவர் சேர்க்கப்படவில்லை. அடுத்து என்ன செய்வது என்கிற தவிப்பில், பா.ஜ.க, ம.ந.கூ ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடத்தினார் வாசன்.
அப்போதும் வெளிப்படையாக கூட்டணி பற்றி அறிவிக்கவில்லை. பிறகு ஒருவழியாக, ம.ந.கூவுடன் கூட்டணி என்று அறிவித்தார்.  இப்படி கூட்டணி அமைப்பதில் மிகவும் தாமதம் ஆனது.
மக்கள் நல கூட்டணி –  தேமுதிக கூட்டணியில் கூட்டணியில்  த.மா.காவுக்கு 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. பிரதான கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. மட்டுமின்றி தனித்து போட்டியிடும் பா.ம.கவும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.
ஆனால் த.மா.கா. சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை இன்னும் வாசன் அறிவிக்கவில்லை. இது குறித்து இன்று அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோதும் குறிப்பட்டு ஏதும் சொல்லவில்லை. “இன்னும் ஓரிரு நாளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம்” என்றார்.
“கூட்டணியிலும் தாமதம், வேட்பாளர் அறிவிப்பிலும் தாமதமா” என்று பத்திரிகையாளர்களிடையே கமெண்ட்  எழுந்தது.

More articles

Latest article