sat

தாக்கர்:

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சாட் நாட்டின் முன்னாள்  அதிபர்  ஹிசென் ஹப்ரெ நிகழ்த்திய போர்க் குற்றங்கள் குறித்த விசாரணை மற்றொரு ஆப்பிரிக்க நாடான செனகல் தலைநகர் தாக்கரில் தொடங்க இருக்கிறது.

சாட் நாட்டின் அதிபராக ஹிசென் ஹப்ரெ  இருந்த 1980ம் வருட காலகட்டத்தில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள்.  இதற்கு ஹப்ரெ தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. 1992-ஆம் ஆண்டு சாட் நாட்டின் உண்மையறியும் குழுவும் இதை உறுதி செய்தது.

கடந்த 2005-ஆம் ஆண்டு பெல்ஜியம் நீதிமன்றம ஹிசென் ஹப்ரெக்கு பிடி ஆணை (அரெஸ்ட் வாரண்ட்) பிறப்பித்தது.   ஆனால், “இது ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பிரச்சனை. ஆகவே ஏதேனும் ஒரு ஆப்பிரிக்க நாட்டில்தான் ஹிசென் ஹப்ரெவை விசாரிக்க வேண்டும்” என்று  செனகல் உட்பட சில ஆப்பிரிக்க நாடுகள் கூறின.

இதையடுத்து செனகல் தலைநகர் தாக்கரில், முன்னாள் அதிபர் ஹிசென் ஹப்ரெ மீதான  போர்க் குற்றங்கள் குறித்த விசாரணை துவங்க இருக்கிறது.

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மீதான  போர்க்குற்றம் குறித்து அந்த நாடே விசாரிக்கலாம் என்று அமெரிக்கா கூறியுள்ள நிலையில், சாட் முன்னாள் அதிபர் மீதான விசாரணை அண்டை நாடான செனகலில் நடப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.