மலேஷியா இந்து மதம் சங்கம் - ஆர் எஸ் மோகன் ஷான்
மலேஷியா இந்து மதம் சங்கம் – ஆர் எஸ் மோகன் ஷான்

பெட்டாலிங் ஜெயா:
பெற்றோர் தவறுதலாக பதிவு செய்தததால் 7 ஆயிரம் இந்துக்கள் முஸ்லிம்கள் என உள்துறை அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலேசியாவில் உள்ள 8 இந்து அமைப்புகள் இந்த புகார் தொடர்பாக பிரதமர் நாசிப் ரசாக்கை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். மலேசியா இந்து சங்க தலைவர் மோகன் ஷான் கூறுகையில்,‘‘ மலேசியா முழுவதும் இந்துக்களாக வாழும் ஆயிரக்கணக்கானோர் முஸ்லிம்களாக அரசு பதிவேடுகளில் உள்ளனர்.
அவர்களது மதமாறிய பெற்றோர் சில தலைமுறைக்கு முன்னால் தவறுதலாக அவர்களை முஸ்லிம் என பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு இஸ்லாம் குறித்து எதுவும் தெரியாது. அவர்கள் இந்து வழிபாட்டு முறையையே கடைபிடிக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் குறைந்த வருவாய் உள்ள பிரிவை சேர்ந்தவர்கள். அச்சம் காரணமாக அவர்கள் நீதிமன்றம் செல்ல தயங்குகின்றனர். இந்திராகாந்தி மற்றும் தீபா என்ற இரு நபர்கள் மட்டுமே நீதிமன்றத்தை நம்பி நாடியுள்ளனர். நீதிமன்றத்தின் முடிவு அனைவரும் நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும்’’ என்றார்.
இந்து இளைஞர் அமைப்பு ஆலோசகர் அருண் துரைசாமி கூறுகையில்,‘‘ இது போன்ற புகார்கள் இது வரை 500 பதிவாகியுள்ளது. விசாரணை மற்றும் தகவல்கள் அடிப்படையில் இந்த எண்ணிக்கை 7 ஆயிரம் வரை இருக்கும். மக்கள் வாழ விரும்பும் வழியில் அவர்களை வாழ அனுமதிக்க வேண்டும். இதற்காக பிரதமரை சந்திக்க முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.