பேச்சினில் கண்ணியம் வேண்டும்! : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

Must read

a
பா.ம.க. பேச்சாளர்கள் தங்களது பேச்சில் கண்ணியத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை முதன்முதலில் தொடங்கியது பாட்டாளி மக்கள் கட்சி தான்.
ஓராண்டுக்கு முன்பே 15.02.2015 அன்று சேலத்தில் முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை அறிவித்து பா.ம.க. தொடங்கிய பிரச்சாரம்  தமிழகம் முழுவதும் உள்ள மக்களை கவர்ந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் எட்டு மண்டல மாநாடுகள், வண்டலூரில் மாநில மாநாடு, நூற்றுக்கணக்கான பரப்புரைக் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கடைநிலைத் தொண்டரில் தொடங்கி முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி இராமதாஸ் வரையிலான நிர்வாகிகளும், நானும் ஆற்றிய உரைகளில் சிந்திக்கத்தக்க கருத்துக்கள் மட்டும் தான் இடம்பெற்றிருந்தனவே தவிர முகம் சுழிக்க வைக்கும் வகையில் தனிநபர் தாக்குதலோ, ஆதாரமற்ற குற்றச்சாற்றுகளோ ஒருபோதும் முன்வைக்கப்படவில்லை.
நாகரீகமான, வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் (Decent and Development Politics) தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை என்பதை பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறேன். கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் வழிகாட்டு விதிமுறைகளில், ‘‘தேர்தல் பிரசாரத்தின் போது மிகவும் நாகரிகமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள், கடந்த கால சாதனைகள் ஆகியவற்றைக் கூறி மட்டுமே வாக்கு கேட்க வேண்டும்.
தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்கக் கூடாது’’ என்று தெளிவாக அறிவுறுத்தியிருந்தேன். எனது வழிகாட்டுதல்களை பா.ம.க.வின் மாநில நிர்வாகிகளும், பேச்சாளர்களும் சிறிதும் நெறி பிறழாமல் கடைபிடித்து, கண்ணியமாக பரப்புரை செய்து வருகின்றனர்.
முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி இராமதாஸ் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட  சுற்றுப்பயணங்களின் போதும், ‘7 நாட்கள், 7 நகரங்கள், 7 தலைப்புகள்’ என்ற தலைப்பில் நடத்திய துறை சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும், ‘உங்கள் ஊர்… உங்கள் அன்புமணி’ என்ற தலைப்பில்  மாவட்ட அளவிலான பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்து அம்மாவட்ட மக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிகளிலும் வளர்ச்சி, முன்னேற்றம் போன்ற கொள்கைகள், செயல்திட்டங்களைத் தாண்டி தனிநபர் விமர்சனங்கள் இடம் பெற்றதில்லை. இத்தகைய பரப்புரை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்னும் இரு வாரங்களில் தொடங்கவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இனிவரும் நாட்களில் பரப்புரை தீவிரமடையும். அப்போது பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக அவதூறான குற்றச்சாற்றுகளையும், பா.ம.க. தலைமை மீது கண்ணியமற்ற தாக்குதலையும் எதிர்க்கட்சிகள் தொடுக்கக்கூடும். அத்தகைய தருணங்களில் பா.ம.க. நிர்வாகிகளும், பேச்சாளர்களும்  நிலை தவறியோ, நிதானம் இழந்தோ அவர்களின் அவதூறு குற்றச்சாற்றுக்கு அவர்களின் பாணியிலேயே பதில் அளிக்க முனையக்கூடாது.
சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியை ஒரு தட்டிலும், மற்ற அனைத்துக் கட்சிகளையும் இன்னொரு தட்டிலும் வைத்து தான் மக்கள் பார்க்கின்றனர். மற்ற கட்சிகளின் தலைவர்கள் அரசியலை தவிர்த்துவிட்டு தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தான் கொள்கைகளையும், செயல்திட்டங்களையும் பேசி வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் தரமான கல்வியும், மருத்துவமும், வேளாண்மைக்கான இடுபொருட்களும் இலவசமாக வழங்கப்படும், ஊழலும், மதுவும் ஒழிக்கப்படும், தொழில்வளத்தை பெருக்கி கூடுதலாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட ஆக்கபூர்வமான செயல்திட்டங்களை மட்டுமே முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி இராமதாஸ் முன்வைத்து வருகிறார். தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த அவரது இந்த பார்வை மக்களை கவர்ந்திருப்பதுடன், வரவேற்பையும் பெற்றுள்ளது.
சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வரும் என்பார்கள். அதற்கிணங்க மற்ற கட்சிகள் எதைப் பேசினாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகளும், பேச்சாளர்களும் நாகரிகமான, வளர்ச்சி சார்ந்த அரசியலையும், இரு திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான செயல்திட்டங்களை மட்டுமே பேச வேண்டும். தேர்தல் வரை மட்டுமின்றி தேர்தலுக்குப் பிறகும் இதே நிலைப்பாடு தான் தொடரவேண்டும். ஏனெனில் நமது கொள்கை  சட்டியில் வளர்ச்சிக்கான அரசியலும், வளர்ச்சிக்கான செயல்திட்டங்களும் மட்டுமே நிரம்பியுள்ளன” – இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

More articles

Latest article