முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை சென்னை நிகழ்ச்சி ஒன்றில் செருப்பால் அடித்ததாக கைது செய்யப்பட்ட பிரபாகரன் மீது பதியப்பட்ட வழக்குகள் பற்றி காவல்துறை செய்தி வெளியிட்டது.
பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் இந்திய பீனல் கோடு பிரிவுகளும், அதற்கான விளக்கமாக (அடைப்புக்குறிக்குள்) காவல் துறை கொடுத்ததும்:
கொலை மிரட்டல், (506 (2) பொது இடத்தில் ஒருவரை தாக்கி அவமானப்படுத்துதல் (356), தாக்குதலில் ஈடுபடுதல் (323, 324)
மேற்கண்ட சட்டப்பிரிவுகள் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை விதிக்கப்படும் என்று வழக்கறிஞர் கே. பாரதி பி.ஏ.பி.எல். அவர்களிடம் கேட்டோம்.
அவர் கூறியதாவது:
“குறிப்பிட்ட இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை .506 (2) : 356 and 324 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிய முடியாது. ஏனென்றால், 506 (2) என்பது கொலை மிரட்டலுக்கான பிரிவு. அந்த சம்பவத்தின் போது, எம். கே. நாராயணனை பிரபாகரன் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக தெரியவில்லை. அடுத்து . 356 சட்டப்பிரிவு பொருள் களவாடும் நோக்கோடு தாக்குதல் நடத்துவது. அதையும் பிரபாகரன் செய்யவில்லை. 324 என்பது உடலில் வெட்டுக்காயம் ஏற்படுத்துதல். அதுபோன்ற சம்பவமும் அங்கே நடக்கவில்லை.
323 பிரிவின் கீழ் பதிவு செய்திருக்கிறார்கள். இது மட்டும்தான் சரி. ஏனென்றால் சம்பந்தப்பட்ட நபரை பிரபாகரன் செருப்பால் அடித்திருக்கிறார். அதாவது தாக்கியிருக்கிறார். அதற்கான பிரிவுதான் இது. ஆனால் இந்த பிரிவில் மட்டும் வழக்கு போட்டால், பெயிலில் வெளிவந்துவிடலாம். பிரபாகரனை பெயிலில் விடக்கூடாது என்பதற்காகவே கூடுதலாக சில பிரிவுகளில் வழக்கு பதிந்திருக்கிறார்கள்.
இதெலாலம் கோர்ட்டில் நிற்காது என்பது போலீஸுக்கும் தெரியும். ஆனால் அப்படி வழக்கு பதிந்தால்தான் நான்கைந்து நாள் சிறையில் வைக்கலாம. தங்கள் கஸ்டடியில் “விசாரிக்கலாம்” என்பதற்காகவே இப்படி செய்திருக்கிறார்கள்” என்றார் வழக்கறிஞர் கே.பாரதி.