சமீபத்திய "அம்மா" பச்சைகுத்து
சமீபத்திய “அம்மா” பச்சைகுத்து

 
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவத்தை கையில் பச்சைக்குத்திக்கொள்வது, பெரும் விழாவாகவே(!) நடந்தது. அப்பாவி சிறுமிக்கு கட்டாயமாக பச்சை குத்தியது குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.
எம்.ஜி.ஆர் காலத்திலும் இப்படி ஓர் பச்சைகுத்து வைபவம் நடந்தது. அ.தி.மு.க.வின் அப்போதைய பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆர் கட்சித்தொண்டர்களுக்கு ஓர் உத்தரவு இட்டார். கட்சித்தொண்டர்கள் அனைவரும்  இரட்டை இலை சின்னத்தை தங்களது கையில் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது.
இதை ஏற்று அக்கட்சியைச் சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் உட்பட தொண்டர்கள் பச்சைகுத்திக்கொண்டார்கள்.  எம்.ஜி.ஆர். ஆட்சியில் அமைச்சராக இருந்த நாஞ்சில் மனோகரனும், தனது கையில் இரட்டை இலை சின்னத்தை பச்சைகுத்திக்கொண்டார். பிறகு இவர் தி.மு.கவுக்கு வந்துவிட்டார். பொது இடங்களிலும், மேடாைகளிலும் மிக கவனாக தனது கையிலிருக்கும் இரட்டை இலை பச்சையை மறைத்தார் என்பார்கள்.
பச்சை குத்திக்கொள்ள வேண்டும்  என்று எம்.ஜி.ஆர்  அறிவித்தபோதே ஆர்.எம்.வீரப்பன், ஹண்டே, விருதுநகர் பெ.சீனிவாசன் உள்ளிட்ட பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு எம்.ஜி.ஆர். “நான் தூக்கியெறியப்பட்ட போது புதுக்கட்சி தொடங்கினேன் அல்லவா! அப்போது யாரைக்கேட்டேன்? புதுக்கட்சிக்கு அண்ணா திமுக என பெயர் வைத்தேனே! அப்போது யாரைக்கேட்டேன்? கட்சி கொடியில் அண்ணாவின் உருவத்தை பொறித்தேனே! அப்போது யாரைக்கேட்டேன்? இப்போது பச்சை குத்தச் செல்வதற்கு யாரைக் கேட்க வேண்டும்?” என்று  விளக்கம் அளித்தார்.

இருந்தாலும் பிரச்சினை ஓயவில்லை. கோவை செழியன், கோ.விஸ்வநாதன், விருதுநகர் சீனிவாசன் ஆகியோர் இது தொடர்பாக எம்.ஜி.ஆருக்கு ஒரு கடிதம் எழுதினர்.
அந்த கடிதத்தில், “பச்சை குத்திக்கொள்ளும் முறை நமது கட்சியின் பரம்பரிய பகுத்தறிவு கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது. பச்சை குத்திக்கொள்வதால், புற்றுநோய் உள்பட பல்வேறு வியாதிகள் உடலில் தோன்றக்கூடும் என்று கண்டறியப்பட்டு, பல நாடுகளில் பச்சை குத்துவதை சட்டப்படி தடை செய்திருக்கிறார்கள். இஸ்லாமிய சமுதாயத்தில் பச்சை குத்துவது மத விரோதம். கிறிஸ்த்துவர்கள், சமணர்களுக்கும் அப்படியே. சுதந்திர உணர்வோடு ஜனநாயக பணியாற்றும் கழக தொண்டர்களை அரசியல் கொத்தடிமைகளாக மாற்றும் இந்த பச்சை குத்தும் உத்தரவை கைவிட வேண்டும்” என்று கோரியிருந்தனர்.
அதற்கு எம்.ஜி.ஆர்., “பச்சை குத்திக்கொள்வது என்பது என்னுடைய ஆசை. விருப்பம் இருப்பவர்கள் செய்து கொள்ளலாம். பச்சை குத்திக் கொள்ளாதவர்கள் கழக கொள்கையில் இருந்து விலகி விட்டவர்கள் என்றோ, அதிமுகவின் எந்த பதவியிலும் இருக்க தகுதியில்லாதவர்கள் என்று கூற இடமில்லை” என்றார்.
ஆனால் பச்சை குத்துதலை எதிர்த்து கடிதம் எழுதிய மூவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்!