தேர்தல் தமிழ்: வேட்பாளர்

Must read

என். சொக்கன்
t t
சென்ற ஆண்டு திருப்பூரில் ‘மனைவி நல வேட்பு நாள் விழா’ என ஒன்று நடைபெற்றது.
தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் ‘வேட்பு மனு’வைச் சமர்ப்பிப்பார்கள், அது தெரியும், அதென்ன ‘மனைவி நல வேட்பு’?
‘வேட்பு’ அல்லது ‘வேட்டல்’ என்றால், ஒன்றை விரும்புதல்/ வேண்டுதல் என்று பொருள். இது ‘வேள்’ என்ற சொல்லிலிருந்து வந்தது. அதன் பொருள், ‘விருப்பம்’.
தாகமாக இருப்பதை ‘நீர்வேட்கை’ என்பார்களே, அந்தச்சொல் இதிலிருந்து வந்ததுதான்.
அதேபோல், வேள்வி என்றால், ஒன்றை விரும்பிச் செய்வது, வேடன் என்றால், ஒன்றை விரும்பிச் சென்று பிடிக்கிறவன். இந்தச் சொற்களும் இதே குடும்பம்தான்.
ஆக, மனைவி நல வேட்பு நாள் என்றால், மனைவியின் நலத்தை விரும்பும் நாள் என்று பொருள். அந்தக் கருத்தில்தான் திருப்பூரில் அவ்விழா நடைபெற்றது.
அப்படியானால் ‘வேட்பு மனு’ என்பது என்ன? எதையோ விரும்பி மனுப்போடுவதுதான்!
ஒருவர் தேர்தலில் ஏன் நிற்கிறார்?
குறிப்பிட்ட தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகச் செயல்படவேண்டும் என்று அவர் ‘விரும்பு’கிறார், அல்லது, அந்தப் பதவி/பொறுப்பின்மீது வேட்கை கொள்கிறார், ஆகவே, அவர் ‘வேட்பாளர்’.
ஆரம்பத்தில் இப்படித் தேர்தலில் நிற்கிறவர்களை ‘அபேட்சகர்’ என்று வடமொழியில்தான் குறிப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். திராவிட இயக்கம் தேர்தலில் ஈடுபடத்தொடங்கிய நேரத்தில்தான் ‘வேட்பாளர்’ என்ற அழகிய தமிழ்ச்சொல் புழக்கத்துக்கு வந்தது.
இந்தச்சொல்லைத் தேர்தலுக்கு வெளியிலும் பயன்படுத்தலாம், ஓர் அலுவலகத்தில் ஒரு வேலைக்குச் சேர விரும்பி விண்ணப்பம் போடுகிற ஒருவர்கூட, ‘வேட்பாளர்’தான்!
(தொடரும்)

More articles

Latest article