தேர்தல் தமிழ்:  செயலாளர்

Must read

என். சொக்கன்
1
‘அர்’ விகுதிபற்றி ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அதன்படி, ஒரு கட்சி அல்லது அமைப்பின் செயல் விவகாரங்களைக் கவனிக்கிறவரைச் செயல் + அர் = செயலர் என்று அழைக்கலாம்.
ஆனால், உண்மையில் அந்தப் பொறுப்பில் உள்ளவரைச் ‘செயலாளர்’ என்றல்லவா அழைக்கிறோம்? இது ஏன்?
செயலாளர் என்பது செயல் + ஆளர் என்று பிரியும், இதில் ஆளர் என்பதை மீண்டும் பிரித்தால் ஆள் + அர் என்றாகும், ஆகவே, செயலைப் புரிகிற ஆள் என்பதுதான் பொருள்.
ஆக, செயலர், செயலாளர் இரண்டும் ஒன்றுதான்.
ஆளர் என்ற விகுதியை நாம் பல இடங்களில் காண்கிறோம், எழுத்தாளர், உழைப்பாளர், தொழிலாளர், விரிவுரையாளர், அமைப்பாளர், பயிற்சியாளர், தொகுப்பாளர்…
இப்படி நாம் அதிகம் பயன்படுத்துகிற காரணத்தால், இதுவொரு புதிய பயன்பாட்டைப்போல் தோன்றலாம். ஆனால் உண்மையில் இது பழைய பயன்பாடுதான். திருஞானசம்பந்தர் எழுதுகிறார்:
‘எரிஆர்வேல் கடல்தானை இலங்கைக்கோன்தனை வீழ
முரிஆர்ந்த தடந்தோள்கள் அடர்ந்து உகந்த முதலாளர்.’
நெருப்புபோன்ற வேலைக்கொண்ட கடற்படையைக்கொண்டவன் இலங்கை அரசன் ராவணன், ஆனால் அவன் கர்வம்கொண்டு சிவனுடைய கயிலாயமலையைத் தூக்க முயன்றபோது, தடுமாறி விழுந்தான், தன்னுடைய ஒற்றை விரலால் அவனுடைய வலிமையான, பெரிய தோள்களை நெரித்தார் சிவபெருமான், பிறகு, அவன் பாடிய சாமகானத்தைக் கேட்டு அவனுக்கு அருள்செய்தார் அந்த முதலாளர்.
இங்கே முதலாளர் என்பது, முதல் + ஆளர் என்று பிரிகிறது, அனைத்துக்கும் முதலானவர் என்பதால், அவரை ‘முதலாளர்’ என்கிறார் ஞானசம்பந்தர்.
‘முதலாளி’ என்பதும் கிட்டத்தட்ட இதேமாதிரி சொல்தான், முதல் + ஆளி. ஆனால் அங்கே ‘முதல்’க்கு அர்த்தம் வேறு, தொழிலில் செய்யப்பட்ட முதலீடு, capital investmentஐக் குறிக்கிறது. அதை ஆள்பவர் என்பதால் அவர் முதலாளி!
(தொடரும்)

More articles

Latest article