திலீபன் - கோவை ராமகிருஷ்ணன்
திலீபன் – கோவை ராமகிருஷ்ணன்

தேசீய கொடியை எரித்ததாக கைது செய்யப்பட்ட திலீபன் மகேந்திரன் என்ற இளைஞரின் கையை போலீசார் அடித்து உடைத்ததாக சமூகவலை தளங்களில் தகவல் பரவி,பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அந்த இளைஞர் சார்ந்துள்ள  தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கோவை. ராமகிருஷ்ணனை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “திலீபன் மகேந்திரனை காவல்துறையினர் தாக்கவில்லை. கை ஒடிந்து கட்டு போட்டிருப்பது பழைய படம். ஆர்வ மிகுதியில் சிலர் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புகிறார்கள்” என்றார்.
மேலும், “இது குறித்த எனது கருத்தை வெளியிடுங்கள். பெயர் வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார். அதன்படி, “திலீபன் மகேந்திரனை காவல்துறையினர் அடித்து கையை  உடைத்தனர் என்பது தவறான தகவல் என தந்தை பெரியார் திராவிடர்  கழகத்தைச் சேந்தவர்கள் கூறுகிறார்கள்” என்று  கடந்த 5ம் தேதி செய்தி வெளியிட்டோம்.
ஆனால், “திலீபன் கையை உடைத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரி, நேற்று கோவையில் கோவை ராமகிருட்டிணன் தலைமையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதே கோரிக்கையோடு நாளை சென்னையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக, விடுதலை சிறுத்தைக்கள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்,  எஸ்டி.பி.ஐ., ஆகிய அமைப்புகள் கலந்துகொள்கின்றன.
இதையடுத்து நாம், கோவை ராமகிருஷ்ணனை இன்று மீண்டும் தொடர்புகொண்டு பேசினோம்.
அவர்,  “திலீபன் மகேந்திரனை காவல்துறையினர் தாக்கவில்லை என்றே ஆரம்பத்தில் நினைத்தேன். அதனால் அப்படிச் சொன்னேன். வழக்கறிஞர் துரைசாமியின் ஜூனியர் இளங்கோ, திலீபன் மகேந்திரனை புழல் சிறையில் சந்தித்து பேசினார்.
அப்போது திலீபன் மகேந்திரன் தான் தாக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.
கடந்த ஒன்றாம் தேதி. புளியந்தோப்பு காவல் நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டரும், அப் பகுதி ஏ.சியும் தாக்கியிருக்கிறார்கள். பிறகு கண்ணைக் கட்டி, வேறு எங்கோ கொண்டு சென்றிருக்கிறார்கள்.
அங்கு, நாலைந்து காவலர்கள் திலீபனை கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார்கள். காயம் வெளியில் தெரியக்கூடாது என்பதால், ஈர சாக்கால் போர்த்தி, பிறகு தாக்கியிருக்கிறார்கள். தாக்கியவர்கள் இந்தியில் திட்டியபடியே தாக்கினார்களாம்.  மத்திய காவல்துறையினராக இருப்பார்கள் என நினைக்கிறேன்.
பிறகு, பிறகு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு திலீபன் மகேந்திரனை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு, மருத்துவர்களிடம், “தேசீய கொடியை எரிச்சவன் இவன்தான்… அதனால டிரீட்மெண்ட் எல்லாம் வேண்டாம்.  சும்மா கையை சுத்தி ஒரு கட்டு போட்டு விடுங்க போதும்” என்று போலீசார் கூறியிருக்கிறார்கள். மருத்துவர்களும் அதே போல செய்திருக்கிரார்கள்.
பின்னர் மேஜிஸ்திரேட் முன் திலீபன் மகேந்திரனை ஆஜர் படுத்தியபோது, “உன்னை தாக்கியதாக கோர்ட்டில் சொன்னால், உயிருக்கு உத்திரவாதம் கிடையாது” என்று கடுமையாக மிரட்டியிருக்கிறார்கள். அதனால் திலீபனும் கோர்ட்டில் ஏதும் சொல்லவில்லை.
வழக்கறிஞர் துரைசாமியின் ஜூனியர் இளங்கோ இதையெல்லாம் என்னிடம் சொன்ன பிறகுதான் உண்மை நிலை தெரிந்தது. ஆகவேதான் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். நாளை சென்னையிலும் நடத்தப்போகிறோம்” என்றார் கோவை ராமகிருஷ்ணன்.

  • டி.வி.எஸ். சோமு

..