isis-flag

டில்லி:  

.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர துருக்கிச் சென்ற தமிழக இளைஞர்கள் இருவர் அங்கிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவரும் கரூரை சேர்ந்த அவரது நண்பரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர விரும்பினர். இதையடுத்து இணையதளம் மூலமாக சிரியா நாட்டிற்குச் செல்வது குறித்த தகவல்களை திரட்டினார்கள்.

பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுலா பயணிகள் போல் பெங்களூருவில் இருந்து துபாய் சென்ற இவர்கள், அங்கிருந்து துருக்கி நாட்டிற்குச் சென்றனர்.

துருக்கி – சிரியா நாடுகளின் எல்லைப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கிய இவர்கள், எல்லைத்தாண்டி செல்வது குறித்து பலரிடம் விசாரித்திருக்கிறார்கள். இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர், துருக்கி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.

உடனே வந்த துருக்கி அதிகாரிகள், தமிழக இளைஞர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர்.   இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக வந்து இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து இருவரையும் துருக்கியிலிருந்து இரு வாரத்துக்கு முன் இந்தியாவுக்கு நாடு கடத்தினர். பெங்களூருவுக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்த அந்த இரு இளைஞர்களையும் பிடித்து, ரகசிய இடத்தில் விசாரணை நடத்தினர் இந்திய உளவுத்துறை அதிகாரிகள். பிறகு இருவரையும் எச்சரிக்கை செய்து அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பிவைத்தனர்.

இருவரையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் சமூகவலைதளங்களில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக எழுதுபவர்களையும் கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.