பிரான்டன் அஸ்டர் ஜோன்
பிரான்டன் அஸ்டர் ஜோன்

ஜார்ஜியா:
அமெரிக்காவில் 37 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூத்த சிறைவாசிக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவில் கடந்த 1979ம் ஆண்டு வீட்டு உபயோகப் பொருள் கடையில் கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் கடை மேலாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் பிரான்டன் அஸ்டர் ஜோன், சாலமன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜார்ஜியா நீதிமன்றம் இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இந்த வழக்கில் சாலமனுக்கு 1985ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மேல் முறையீடு, உடல்நிலை சரியில்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி ஜோன்ஸ் மீதான மரண தண்டனை நிறைவேற்ற முடியாமல் காலம் தாழ்ந்து வந்தது. நேற்று இவருக்கு மரண தண்டனையை நிவைற்ற முடிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டில் இதற்கு தடை உத்தரவு பெற ஜோன்ஸ் வக்கீல்கள் முயற்சி செய்தனர். இதனால் தண்டனை நிறைவேற்ற 6 மணி நேரம் தாமதமானது. ஆனால், தடை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று காலை அமெரிக்க நேரப்படி பிற்பகல் 12.46 மணிக்கு விஷ ஊசி செலுத்தி 72 வயதான ஜோன்ஸூக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஜோன்சுக்கு இறை வழிபாடு நடத்தவும், இறுதி உறுதிமொழி வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
அமெரிக்காவில் இந்த ஆண்டில் நிறைவேற்றப்படும் 5வது மரண தண்டனை இது. முதல் இரண்டு ஜார்ஜியாவிலும், அடுத்து டெக்சாஸ், அலபாமா, ப்ளோரிடா ஆகிய மாகாணங்களில் தலா ஒரு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.