ஜல்லிக்கட்டு வழக்கு: தமிழக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு ஏற்க மறுப்பு
ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் தொடுத்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த 2014–ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. இதனால் தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து மத்திய அரசு ஜனவரி 7–ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக 13 மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து மனுக்களையும் விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத்திய அரசின் அறிவிக்கைக்கு இடைக்கால தடைவிதித்தது. மேலும் மத்திய அரசு, தமிழக அரசு, மராட்டியம், குஜராத் உள்ளிட்ட தொடர்புடைய மாநில அரசுகள் 4 வார காலத்துக்குள் பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு பதில் மனுவை தாக்கல் செய்ய 6 வாரம் அவகாசம் கேட்டு நேற்று முன்தினம் கடிதம் தாக்கல் செய்திருந்ததால் விசாரணை தொடங்கியதும் அதை ஏற்று ஜூலை 26–ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது விலங்கு நல ஆர்வலர்கள் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்காமல் தமிழகத்தில் சில இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. எனவே தமிழக அரசுக்கு எதிராக கோர்ட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு குறித்து நீதிபதிகள், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஏதும் நடைபெற்றதாக தகவல் இல்லை. தமிழக அரசு எந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்யவில்லை. விலங்கு நல ஆர்வலர்களுக்கு போலி அறிவுஜீவித்தனமான ஆதங்கம் இருக்கக்கூடாது என்று தெரிவித்தனர். மேலும் அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள நீதிபதிகள் மறுத்து விட்டனர்.