கோவை

கோவையில் நடந்த ஒரு விழாவில் நடிகை குஷ்பு ஆடை சுதந்திரத்தைப் பெண்கள் சரியான முறையில் பயன்படுத்த ண்டும் என கூறி உள்ளார்.

நேற்று கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி வளாகத்தில் பா.ஜ.க. மக்கள் சேவை மையம் சார்பாகத் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டது. கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்குக் கைத்தறி ஆடை அலங்கார போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பாஜக  மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டு ஆடை அலங்கார போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கினர்.  மேடையில் நடிகை குஷ்புவும், வானதி சீனிவாசன் சட்டமன்ற உறுப்பினரும் மேடையில் ஒய்யாரமாக (கேட் வாக்) நடந்து சென்று அசத்தினர்.

நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம்,

“எல்லா இடங்களிலும் கைத்தறி ஆடைகளை முன்னிறுத்த வேண்டும். என்னை கோவையின் மருமகள் என சொல்வதில் பெருமை கொள்கிறேன். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நமது பிரதமர் மோடி உலகத்திலேயே மிகப்பெரிய தலைவராக இருக்கிறார். அவர் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது அமெரிக்க விசா மறுக்கப்பட்டது. ஆனால் இப்போது அவரை அமெரிக்கா கூப்பிட்டு கவுரவிக்கும் நிலை ஏற்பட்டு ஜோ பைடனே தேடி வந்து வணக்கம் சொல்லும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

பொதுவாக ஆடை சுதந்திரம் என்பது இப்படித்தான் என்று எதுவும் இல்லை  என்றாலும் மனிதர்களுக்கு 6 அறிவு இருக்கிறது, நமக்கு எல்லை தெரியும். எல்லை மீறிச் சென்றால் மிருகங்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இதுதான் எல்லை என்பதை  தெரிந்து அதன்படி ஆடை அணிய வேண்டும். ஆடை சுதந்திரத்தைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.”

என்று கூறி உள்ளார்.