கோயில் முன் இஸ்லாமிய பிரச்சாரம்
கோயில் முன் இஸ்லாமிய பிரச்சாரம்

னிக் கிழமை மாலை 5:30 அல்லது 6 மணி இருக்கலாம். திருவல்லிக்கேணி கோவில் வளாகத்தில் ஒரு காட்சியை காண நேர்ந்தது. கோவில் வந்திருக்கும் ஒரு முதிய பெண்மணியிடம் ஒரு இளைஞர் தமது செல்போனை காட்டி ஏதோ விவரித்து கொண்டிருந்தார்.
அந்த இளம் சகோதரர் ஒரு இஸ்லாமியர். ‘படைத்த..  இறைவன் ..’ என்றெல்லாம் வார்த்தைகள் காதில் விழுந்தன. நிச்சயமாக தனிப்பட்ட உரையாடல் அல்ல என திட்டவட்டமாக தெரிந்த பிறகு அவர்கள் அருகில் சென்றோம். சென்றோம் என்றால், ‘ஹிந்துத்துவ அம்பேத்கர்’ நூலின் ஆசிரியர் ம.வெங்கடேசனும்  (Mave Mv ) நானும்.
அரவிந்தன் நீலகண்டன்
அரவிந்தன் நீலகண்டன்

நாங்கள் வந்ததை அன்பான புன்னகையுடன் ஆமோதித்தார் அந்த இஸ்லாமிய இளைஞர்.
‘இது டிஸ்கவரி சேனலில் உள்ள வீடியோ’ என்று தம் செல்போனில் சூரிய குடும்பம் குறித்த கிராபிக்ஸை காட்டி விளக்கினார் அந்த சகோதரர். கனிவான பண்பட்ட வார்த்தைகள். கேட்பவரை எவ்விதத்திலும் புண்படுத்திவிடலாகாது என்பதில் அதிக கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள்.
‘இப்படிப்பட்ட சூரிய குடும்பமே ஒரு பெரும் பிரபஞ்சத்தின் சிறிய பகுதி. என்றால் அதை படைத்தவனை குறித்து நாம் சிந்திக்க வேண்டாமா? அவன் எவ்வளவு பெரியவனாக இருப்பான்!’.
அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்அந்த அம்மணி, “இதைத்தானப்பா நாங்களும் சொல்கிறோம்.. பகவான் உலகத்தை படைத்து சம்ரக்ஷித்து கொண்டிருக்கிறார். அதற்கென்ன இப்போ!’ என்றார் அமைதி மாறாமல்.
சரி நம் பங்குக்கு ஏதாவது சொல்ல வேண்டுமே என்று தோன்ற, வழக்கமான வாதத்தையே முன்வைத்தேன்:  ‘இவ்வளவு பிரபஞ்சத்தையும் படைத்தவன் படைக்கப்படாமல் தோன்றினால் இந்த பிரபஞ்சத்துக்கு மட்டும் படைப்பவன் தேவையா?’
அந்த சகோதரர் மாறாத நிர்விகல்ப புன்னகையுடன் ’நீங்க பேசுறது வாதம். நான் சொல்றது கருத்து. நான் வாதத்துக்கு வரலை’ என்றார். தெளிவு!
‘இல்லை படைக்கப்பட்டதன் ஒழுங்கின் அடிப்படையில் படைத்தவன் குறித்து சிந்திக்கிறதுனாலே அங்கே தர்க்கம் வாதம் வந்துருதுல்ல…’ என்று ஆரம்பித்த  என்னை அந்த வைணவ மூதாட்டி வெட்டினார். முஸ்லீம் நாச்சியார் கதையை சொன்னார். எப்படி பெருமாளிடம் மனம் பறி கொடுத்த இஸ்லாமிய இளவரசி இறுதியில் பரந்தாமனுடனேயே கலந்தார் என்பதை அந்த கொஞ்ச நேரத்துக்குள் விளக்கினார். ‘சரி சொல்லுங்க தம்பி’ என்று அந்த இஸ்லாமிய சகோதரரை பார்த்தார். ’எனக்கு…எனக்கு சொல்ல எதுவும் இல்லை. இதுக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை’ என்றார். அந்த இஸ்லாமிய சகோதரரே நாளைக்கு திருவல்லிக்கேணி மீசைக்கார தேரோட்டியின் பக்தனாகிவிடுவாரோ என்று எனக்கே ஒரு நிமிஷம் தோன்றியது நிஜம்.
‘சரிங்க . ஒரு முக்கியமான இந்து கோவில் முன்னாடி உங்க மத பிரச்சாரத்தை செய்றீங்க. இதே போல இந்துக்கள் உங்க மசூதி முன்னாடி அவுங்க பிரச்சாரத்தை செய்ய அனுமதிப்பீங்களா?’ என்றேன்.
ஒரு நிமிஷம் தயங்கி ‘ஓ செய்யலாமே’ என்றார் அந்த இஸ்லாமிய சகோதரர்.
அந்த வைணவ மூதாட்டி மிகவும் யதார்த்தமாக ‘அதெல்லாம் முடியாது தம்பி! சும்மா சொல்லாதீங்க’ என்று சொன்னார்.
அதற்கிடையில் எங்கிருந்தோ இன்னும் இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள் இந்த இளைஞரைப் போல சாதுவாக எல்லாம் இல்லை. ‘கொடுத்த இலக்கை குறிவைக்காமல் இவங்க இங்க எதுக்கு’ என்கிற கேள்வி அவர்கள் எங்களை பார்த்த பார்வையிலேயே தெரிந்தது. சரி என்று அந்த சகோதரர் வைத்திருந்த ‘மனிதனுக்கேற்ற மார்க்கம்’ என்கிற பிரச்சார பிரசுரத்தை வாங்கிக் கொண்டு நடையை கட்டினோம்.
அது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வெளியீடு.  ஆசிரியர் ஜைனுல் ஆபிதீன். திருச்சி ஷிர்க் மாநாட்டை நடத்திய அதே இயக்கத்தினர்தான்.
இந்து கோவில்களிலும் இஸ்லாமிய பிரச்சாரத்தை செய்கிறார்கள். அடிப்படையான சமுதாய நல்லிணக்கம் என்று ஒன்று இருக்கிறது. ஒரு வித பண்பாட்டு புரிதல். பன்மை மத நம்பிக்கைகள் கொண்ட சமுதாயம் இது. ஒரு மதத்தினரின் மத தலத்துக்கு சென்று, அதுவும் திருவல்லிக்கேணி போல ஆழ்வார்கள் பாடல் பெற்ற பழமையான தலத்துக்கு முன்னால், இப்படி பிற மத பிரச்சாரம் செய்வது, திட்டமிட்டு செய்வது தம் சொந்த மதத்தின் கண்ணியத்துக்கே எதிரானது என்பதை பெரும்பாலான இஸ்லாமிய சகோதரர்கள் புரிந்தே இருப்பார்கள். அவர்கள் இதை எப்படி தடுத்து தம் சமுதாய கண்ணியத்தை நிலை நிறுத்த போகிறார்கள் என்பதை காண ஆவல்!
Aravindan Neelakandan