simbufb

பீப் பாடல் விவகாரம் தொடர்பாக, நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இன்று ஆஜராகவேண்டும் என்று கு கோவை போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இருவரும் இன்று ஆஜராகாமல் பொய்யான காரணங்களைக் கூறி இவர்கள் சார்பில் அவர்களது தந்தைகள் காவல் நிலையத்துக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

சிம்பு பிசியாக (?!) இருப்பதால் 30 நாள் அவகாசம் கேட்டு அவரது தந்தை டி.ராஜேந்தரும், அனிருத்துக்கும் இந்த பாடலுக்கும் தொடர்பே இல்லை என அவரது தந்தை ரவி ராகவேந்திரரும் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு எழுதி, பாடிய ஆபாச பீப் பாடலுக்கு தமிழகம் முழுவதில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இவர்களை கண்டித்து மாதர் சங்கத்தினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இருவரையும் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் சிம்பு, அனிருத் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் கொடுத்தது. உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார் காவல் ஆணையர் அமல்ராஜ். இதையடுத்து சிம்பு, அனிருத் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு குறித்து டிசம்பர் 19-ம் தேதி ( இன்று ) காலை கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என இருவருக்கும் கோவை போலீசார் சம்மன் அனுப்பினர்.

சம்மனை கொடுக்க சென்னை வந்த கோவை போலீசார், சிம்பு வீட்டில் இல்லாததைத் தொடர்ந்து அவரது தந்தை டி.ராஜேந்தரிடம் சம்மனை போலீசார் தந்தனர்.

இதனிடையே, கோவை காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க சிம்பு விடுத்த கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டதோடு, வழக்கு விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இதையடுத்து, சிம்பு, அனிருத் இருவரும் இன்று கோவை காவல்நிலையத்தில் ஆஜராவார்களா? என்ற கேள்வி எழுந்தது.

சிம்புவின் சார்பில் அவரது தந்தை டி.ராஜேந்திரரும், அனிருத் சார்பில் அவரது தந்தை ரவி ராகவேந்திரரும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளனர். டி.ராஜேந்திரன் எழுதியுள்ள கடிதத்தில், ‘சிம்பு தனது வேலையில் பிசியாக இருப்பதால், அவர் நேரில் ஆஜராவதில் இருந்து 30 நாள் அவகாசம் வழங்க வேண்டும்,’ என கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இதேபோல் அனிருத்தின் தந்தை ரவிராகவேந்திரர் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘சர்ச்சைக்குரிய அந்த பாடலுக்கு அனிருத் இசையமைக்கவே இல்லை. இதை ஏற்கனவே ஊடகங்கள் மூலம் தெரிவித்து விட்டோம். இந்த பாடலுக்கும் அனிருத்துக்கும் சம்பந்தமே இல்லை. எனவே இந்த வழக்கில் இருந்து அனிருத்தை விடுவிக்க வேண்டும்,’ என கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மேலும் அனிருத் சார்பில் அவரது வழக்கறிஞர் காவல்நிலையத்தில் ஆஜராகி அனிருத் தரப்பு விளக்கத்தை தெரியப்படுத்தினார்.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து காவல்தறை ஆலோசித்து வருகிறது.

‘பெரிய இடத்து பையன்கள் என்பதால் அவர்கள் கொடுக்கும் விளக்கத்தை எல்லாம் நம்புகிறார்களா காவல்துறையனர்.. இதே சாமானியன் வீட்டு பிள்ளையாக இருந்தால் இப்படி அமைதியாக இருப்பார்களா.. “ என்ற விமர்சனம் காவல்துறை மீது எழுந்துள்ளது.