assam_123456
அசாம் மற்றும் மேற்கு வங்க சட்ட பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குபதிவு இன்று நடைபெறுகிறது. அசாமில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன் படி மொத்தமுள்ள 126 சட்டமன்றத் தொகுதிகளில், 65 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. இதில், 82.21 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்நிலையில், இரண்டாவது மற்றும் இறுதி வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. 61 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 525 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு கோடியே 4 லட்சத்து 35 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக, 12,699 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எவ்வித அசம்பாவிதமும் இன்றி தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதே போன்று மேற்கு வங்க மாநிலத்தில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதனடிப்படையில் 31 தொகுதிகளுக்கான வாக்குபதிவு இன்று நடைபெறுகிறது. 21 பெண் வேட்பாளர்கள் உட்பட 163 பேர் களத்தில் உள்ளனர். மொத்தம் 70 லட்சம் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர். பதற்றம் மிகுந்த வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.