உறவுகள் – கவிதை பகுதி 5

எந்நன்றி ,,,,,

பா. தேவிமயில் குமார்

 

 

இரந்துண்டு எங்கள்

இரைப்பையை

இயக்கிக் கொண்டிருக்கிறோம் !

 

தாளிக்கும் வாசனை

தெருவெங்கும் வீசுதே !

தருவீர்களா ? என

தேடுகிறேன் உணவை !

 

உங்களைத் தவிர

உறவென்பது

எங்களுக்கில்லையே !

ஏனிந்த பிரிவு நமக்குள் ? ?

 

தாய் தகப்பனையே

தவிக்க விடும்

இந்த உலகில்

எங்களைப் பார்க்க

உங்களுக்கேது நேரம் ???

 

உங்களையே

ஒரு காலத்தில்

நம்பி வந்தோம் ! இன்று

நாதியற்று இருக்கிறோம் !!

 

ஒரு காலத்தில்

உங்களுக்காகவே

வாழ்ந்தோம் !

உங்களிடமே

வளர்கிறோம் !

விரட்டினாலும்,

உங்கள் கால்களே

எங்கள் இல்லங்கள் !

 

பல்லாயிரம்

ஆண்டுகளாக

உங்களுக்குப்

பணிவிடை செய்தோம் !!

பாவப்பட்ட

பிறவிகளானோம்

நாங்கள் !

 

வெள்ளையனை

விரட்டிய

வரலாறு படிக்கும்

நாட்டில்,

நாளை,

எங்களை

அழித்த

வரலாறையும்

படிக்கப் போகிறீர்கள் !

 

என் நண்பன்

இவன் என

ஏற்றி வைத்த

எங்கள்

எஜமானர்களே !

இப்போது

“தெரு நாயே” என

தூற்றுவதேன் ?

 

கடவுள் வாகனமாகவும்,

காவல் புரிபவராகவும்,

பாசம் காட்டவும்,

போருக்கு செல்லவும்,

விசுவாசமாக இருக்கவும்

வேட்டைக்குப் போகவும்

பெண்ணுக்கு சீதனமாகவும்

போராட்ட குணத்திற்காகவும்,

 

அரசர்களும்,

ஆண்டிகளும்,

பொதுமக்களும்,

பாகுபாடில்லாமல்

பாசம் வைத்தனர்

எங்கள் மேல் !

 

வெளி நாட்டு ரகமெனவும்

உள் நாட்டு ரகமெனவும்

எங்களை

என்றோ,

சாதியாகப் பிரித்துவிட்டீர்கள் !

அதிலும்,

எங்களை

“அகதி”களைப் போல

அலைய விடுகிறீர்கள் !

 

பல்லாயிரம் ஆண்டுகளாக

பணிவிடை செய்தோம் !

இட்ட வேலையை

எட்டடி பாய்ந்து செய்தோம் !

 

விசுவாசமாக இருந்தவர்க்கு

“விஷம்” கொடுப்பதைப் போல

விரட்டி விரட்டி

அடிக்கிறீர்கள் !

வேறு எங்கு போவோம் ?

உங்களைத் தவிர

வேறெதுவும் அறியோம் !

 

காட்டு விலங்காக

இருந்த எங்களை

வீட்டு விலங்காக்கிட

அழைத்து வந்தீர்கள் !

விருப்பத்தோடு

வந்தோம்,

வாலாட்டிக் கொண்டே !

வாழ வைப்பீர்கள் என்ற

நன்றியுடன் ! மட்டுமல்ல

நம்பிக்கையுடனும் !

 

சிப்பிப்பாறை நாயும்,

செங்கோட்டை நாயும்,

கன்னி நாயும்,

கோம்பை நாயும்,

கட்டக்கால் நாயும்,

மண்டை நாயும்,

மந்தை நாயும்,

அலங்கு நாயும்,

அழிவில் இருக்கிறோம் !

எங்களைக் காப்பாற்றுங்கள் !

எங்களை,

எங்கோ எறிந்து விட்டு,

 

பாக்ஸர்,

பிட்டில்,

ராட்வீலர்,

ரெட்ரீவர்,

புல்மாஸ்டிக்,

குல்மாஸ்டிக்,

உல்ப்டக்,

திபெத்தியன் மாஸ்டிப்

என

தேடியலையும்

தோழர்களே !

 

நாங்கள் உங்களிடம்

நண்பனாக

மீண்டும் ஏங்குகிறோம்

மீட்டெடுப்பீர்களா ?

மறந்ததேன் ? எங்களை ?

மனசு வலிக்கிறது !

 

வேட்டைக்கு உதவிய

எங்களை

இன்று

பசியும்

பாராமுகமும்,

வேட்டையாடுகிறது !

 

“நன்றி கெட்ட நாயே”

என

நாக்கூசாமல் சொல்லும்

மனிதர்களே !

மனசார சொல்லுங்கள்….

நன்றி மறந்தவர்கள்

நாங்களா ?

 

இப்படிக்கு

தெரு நாயே ! என

துரத்தப்படும் நாட்டு நாய்கள்