பெங்களூரு:
கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பகீரத முயற்சி மேற்கொண்டு வரும் பாரதியஜனதா கட்சி, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளை சார்ந்த எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் மற்றும் சொத்துக்கள் ஆசைக்காட்டி தங்கள் பக்கம் இழுக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான ஏற்கனவே 2 ஆடியோக்கள் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், தற்போது முதல்வராக இருக்கும் எடியூரப்பாவே, காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி பாட்டீலிடம் பேரம் பேசும் ஆடியோ வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரையும் கோச்சிக்கு அழைத்து செல்ல காங்கிரஸ் தலைமை முயற்சி மேற்கொண்ட நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி பாட்டீலிடம், காங்கிரசாருடன் கொச்சிக்கு செல்லாமல் தவிர்க்கும்படியும், தங்களுக்கு ஆதரவு அளித்தால் அமைச்சர் பதவி தருகிறேன் என்று பேசியதாக அந்த ஆடியோ தகவல்கள் கூறுகிறது.
மேலும் பி.சி பாட்டீலிடம், கர்நாடக பாஜக பொறுப்பாளர் முரளிதர்ராவ் பேசிய விவரமும் அந்த ஆடியோவில் வெளியாகி உள்ளது.
அதில், முரளிதரராவ் பட்டீலும் நீங்கள் எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு பட்டீல் ‘சகேபுரு’ என பதில் தெரிவிக்காமல் மவுமான இருக்கிறார்.
இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் எடியூரப்பா பேசிய 3வது குதிரை பேர ஆடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே காங்கிரஸ் ராய்ச்சூர் எம்எல்ஏ பசவனகவுடா தாதலிடம் பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசிய 2 ஆடியோ வெளியாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் முதல்வர் எடியூரப்பாவே பேரம் பேசிய ஆடியோவை காங்கிரஸ் தற்போது வெளியிட்டிருப்பது மேலும் பரபரப்பை கூட்டி உள்ளது.
இந்த ஆடியோக்களின் தாக்கம் இன்று மாலை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தெரிய வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…