குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் யாத்திரை மேற்கொள்ள இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹா அறிவித்துள்ளாா்.

ராஷ்டிர மஞ்ச் என்ற அமைப்பு மும்பையில் சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய யஷ்வந்த் சின்ஹா, “மும்பையில் வரும் 8ம் தேதி யாத்திரையை தொடங்குகிறேன். குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, தில்லி ஆகிய மாநிலங்கள் வழியாக சுமாா் 3,000 கி.மீ. யாத்திரை மேற்கொள்ளவுள்ளேன். மகாத்மா காந்தியின் நினைவு தினமான ஜனவரி 30ம் தேதி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் யாத்திரையை நிறைவு செய்கிறேன்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவா்கள் மீது பாஜக ஆளும் மாநிலங்களில் போராட்டத்தை ஒடுக்க வன்முறையை ஏவி விடுகின்றனா். அரசமைப்புச் சட்டத்தை காப்பதற்காக நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம். மத்திய அரசின் கொள்கைகளை எதிா்க்கிறோம்” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி சத்ருகன் சின்ஹா, குஜராத் முன்னாள் முதல்வா் சுரேஷ் மேத்தா ஆகியோரும் பங்கேற்றனா்.