உலகின் முதல் மரத்தாலான செயற்கைக்கோள், லிக்னோசாட் எனப்படும் சிறிய ஜப்பானிய விண்கலம், ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) டிராகன் கார்கோ கேப்சூலில் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
லிக்னோசாட் என்றழைக்கப்படும் இந்த மரத்தாலான செயற்கைக்கோள், விண்வெளியில் சில முக்கிய சோதனைகளைச் செய்வதற்காக நவம்பர் 5 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) சென்றடைந்தது.
உலகின் முதல் மரத்தாலான லிக்னோசாட் என்ற இந்த செயற்கைக்கோளை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர்.
லிக்னோசாட் ஒவ்வொரு பக்கத்திலும் வெறும் 4 அங்குலங்கள் (10 சென்டிமீட்டர்) அளவு மட்டுமே உள்ளபோதும் அது விண்வெளிப் பயணம் மற்றும் ஆராய்ச்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
“விண்வெளியில் உள்ள மரம் சற்று எதிர்மறையானது என்று சிலர் நினைத்தாலும், மரச் செயற்கைக்கோள் வழக்கமான செயற்கைக்கோள்களை விட நிலையானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு குறைவான மாசுபாட்டை ஏற்படுத்தும் என்பதை இந்த ஆய்வு நிரூபிக்கிறது” என்று நாசாவின் சர்வதேச துணை விஞ்ஞானி மேகன் எவரெட் கூறினார்.
வழக்கமான செயற்கைக்கோள்கள் பெரிதும் அலுமினியத்தால் செய்யப்படுகின்றன. அவை தங்கள் வாழ்நாளின் முடிவில் பூமியின் வளிமண்டலத்தில் எரியும் போது, அலுமினிய ஆக்சைடுகளை உருவாக்குகின்றன, இது கிரகத்தின் வெப்ப சமநிலையை மாற்றும் மற்றும் அதன் பாதுகாப்பு ஓசோன் படலத்தை சேதப்படுத்தும்.
அலுமினியத்திற்கு பதிலாக மாக்னோலியா மரத்தில் செய்யப்பட்ட இந்த லிக்னோசாட் போன்ற மர செயற்கைக்கோள்கள் பூமியில் மீண்டும் விழும் போது வளிமண்டலத்தில் அத்தகைய மாசு ஏற்படாது என்று இந்த ஆய்வுக் குழு உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இந்த மர செயற்கோள் சோதனையின் வெற்றியைத் தொடர்ந்து எதிர்காலத்தில் உலோக செயற்கைக்கோள்கள் தடைசெய்யப்படலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.