துபாய்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் துவக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் உலகின் முன்னணி டெஸ்ட் அணிகளான 9 அணிகள் கலந்துகொள்ளும். ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பங்குபெறும்.
இந்த அணிகள் அடுத்த 2 ஆண்டுகளில் மொத்தம் 27 டெஸ்ட் தொடர்களில் 71 ஆட்டங்களில் விளையாடும். இவற்றில், முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் வரும் 2021ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளும். இந்த இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வழங்கப்படும்.
“சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆண்கள் உலகக்கோப்பை போட்டியின் மூலம், ஒவ்வொரு ஆட்டத்தின் முக்கியத்துவமும் உணரப்பட்டது. மேலும், உலகின் சிறந்த அணிகள் நேருக்கு நேர் மோதுவதன் முக்கியத்துவமும் உணரப்பட்டது.
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது, அடுத்த 2 ஆண்டுகளுக்கு, இருதரப்பு டெஸ்ட் போட்டிகளில் ஒரு இணக்கத்தையும் சூழலையும் கொண்டுவரும். மேலும், தற்போது ஆண்கள் மற்றும் பெண்களுக்காக நடத்தப்படும் 50 ஓவர்கள் மற்றும் 20 ஓவர்கள் போட்டிகள் போன்றே டெஸ்ட் போட்டிகளும் முக்கியத்துவத்தைப் பெறும்” என்றார் ஐசிசி பொது மேலாளர் ஜியோஃப் அலார்டைஸ்.
“நாங்கள் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறோம். டெஸ்ட் கிரிக்கெட் என்பது சவாலானது மட்டுமல்ல, ஒரு பெரிய திருப்தியையும் தரக்கூடியது. கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் தனக்கான வெற்றியைப் பெற கடுமையாக போராடும்” என்றார் இந்திய கேப்டன் விராத் கோலி.