தாமோ :
“பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க” என யாரோ பெரியவர், திருமணத்தில் வாழ்த்தியதை வேத வாக்காக மனதில் பதிய வைத்து, 16 குழந்தைகள் பெற்ற கிராமத்து பெண்ணின் சோகக்கதை இது:
மத்தியபிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் உள்ள படாஜ்கீர் என்ற கிராமத்தை சேர்ந்த பெண், சுக்ராணி அதீர்வர்.
45 வயதான சுக்ராணி ஏற்கனவே 15 குழந்தைகளை பிரசவித்துள்ளார். இதில் 7 குழந்தைகள் இறந்து விட்டன. 4 ஆண் பிள்ளைகளும், 4 பெண் பிள்ளைகளும் உயிரோடு உள்ளன. இந்த நிலையில் சுக்ராணி மீண்டும் கர்ப்பம் தரித்தார்.
கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்தபோது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் இருவரின் உடல் நிலை மோசமானதால், அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். துரதிருஷ்டவசமாக போகும் வழியிலேயே, தாயும், சேயும் உயிர் இழந்தனர்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தாமோ மாவட்ட சுகாதார அலுவலர் சங்கீதா “பெண்கள் கருத்தடை செய்து கொள்ள அரசாங்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த பெண் 15 குழந்தைகள் பெற்ற நிலையிலும், அவருக்கு கருத்தடை செய்ய தவறியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
– பா.பாரதி