இஸ்லாமாபாத்: பதவியிலிருந்து விலக்கப்பட்டு, தற்போது வெளிநாட்டில் வசித்துவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோ சர்தாரி, தற்போதைய இம்ரான்கான் அரசுக்கு எதிராக, அனைத்துக் கட்சிகள் நடத்தும் மாநாட்டில் கலந்துகொள்ள, நவாஸ் ஷெரீப்பிற்கு அழைப்பு விடுத்ததையடுத்து, இச்செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் லண்டனில் வசித்து வருகிறார 70 வயதாகும் நவாஸ் ஷெரீப். சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல, லாகூர் உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து, அவர் இங்கிலாந்து சென்றார். ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், பதவி நீக்கம் செய்யப்பட்டு, 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் இவருக்கு விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.