சென்னை:
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ள குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக நாளை டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் பதவி ஆகியவற்றை உள்ளடக்கி 6 ஆயிரத்து 491 காலி இடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வு சுமார் 5 ஆயிரத்து 575 தேர்வு மையங்களில் 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் தேர்வாகினர். இதற்கான முடிவுகள் வெளியான நிலையில், ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் வரிசையாக தேர்வாகி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தேர்வாணையத்தின் விதிமுறைகளின்படி, 12 லட்சத்து 76 ஆயிரத்து 108 பேரின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்து இருந்தவர்களில் 35 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தேர்வானது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பயிற்சி மையம் மற்றும் தேர்வு எழுதிய மாணவர்கள் மீதும் புகார்கள் எழுந்தன.
இந்த புகாரின் அடிப்படையில் ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் முதல் 100 இடங்களுக்குள் 35 இடங்களை பிடித்த வர்களிடம், கடந்த 13ந்தேதி முதல் விசாரணை நடைபெற்றது. சம்பந்தப்பட்ட தேர்வர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். விசாரணை யில் பெரும்பாலானவர்கள், ஒரே மாதிரியாக இருந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், குரூப்-4 முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, நாளை டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோரின் தலைமையில் அதிகாரிகள் கலந்துகொள்ளும் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில், குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை குறித்தும், தேர்வை ரத்து செய்வது குறித்தும் விவாதிக் கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.