கட்டற்ற தகவல் களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியா, இந்தியத் தலைவர்களை அவமானப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
ஆங்கிலம், தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் தகவல் களஞ்சியமாக விளங்குவது விக்கிபீடியா. இதில் பல்வேறு தகவல் தொகுப்புகள் உள்ளன. தகவல்கள் தேடுவோருக்கு மிகவும் பயனுள்ள தளம் என்று விக்கிபீடியா அறியப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய தலைவர்களை விக்கிபீடியே அவமதிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து புகார் தெரிவிப்பவர்கள், “விக்கிபீடியா மிக பயனுள்ள இணையதளம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வரலாறு, அரசியல், விளையாட்டு, திரைப்படம், சமூகம் என்று பல்வேறு பிரிவுகளில் தகவல்களை சிறப்பாக அளித்துவருகிறது விக்கிபீடியா. ஆனால் அரசியல் தலைவர்களை அவமதிக்கும் விதத்தில், அவர்களது வாழ்க்கை குறித்த விக்கி பீடியா பகுதியில் “வாழ்க்கை துணைவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளது. இது தலைவர்களை அவமதிப்பதாக உள்ளது
ஜெயலலிதா, முக ஸ்டாலின், சீமான், இல.கணேசன் போன்ற பலரது வாழ்க்கை வரலாறு பகுதியில் வாழ்க்கைத் துணைவர் என்கிற வார்த்தை இல்லை. இது பரவாயில்லை.
ராமதாஸ், விஜயகாந்த் ஆகியோருக்கு வாழ்க்கைத் துணைவர் என்று மட்டும் (சரியாக) உள்ளது.
ஆனால் மோடி, ராஜ்நாத்சிங், சோனியா, வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், அன்புமணி, தங்கபாலு, திருநாவுக்கரசர், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்பில் “வாழ்க்கைத் துணைவர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறது. இது தலைவர்களை அவமதிக்கும் செயல்.
அரசியல் தலைவர்களில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைத் துணைவர்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் இந்திய கலாச்சாரம். ஆகவே “வாழ்க்கைத் துணைவர்கள்” என்று இருப்பதை விக்கி பீடியா மாற்ற வேண்டும்..
இன்று எந்த ஒரு தகவலானாலும் பெரும்பாலோர் விக்கிபீடியாவைத்தான் நாடுகிறார்கள். தினமும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் தளத்தில் தலைவர்கள் குறித்த தகவல்களை கூடுதல் கவனத்துடன் பதிய வேண்டாமா” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இது குறித்து, விக்கிபீடியாவில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வரும் சிலரிடம் பேசினோம்.
அவர்கள், “விக்கிபீடியா என்பது விக்கி மீடியா நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்படும் இணையதளம். வணிக நோக்கமின்றி, அனைத்து தகவல்களும் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் விக்கிபீடியா நடத்தப்படுகிறது.
மொத்தம் 24 மில்லியன்களுக்கு மேற்பட்ட கட்டுரைகள் உள்ள விக்கி பீடியா தளத்தில் தமிழில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன.
பொதுவாக விக்கி பீடியாவுக்கு என்று குறிப்பிட்ட வடிவமைப்பு உண்டு. தலைவர்களின் வாழ்க்கை வரலாறு குறிப்பில் ஆங்கில மரபுப்படி “வாழ்க்கைத் துணைவர்கள்” என்று இருக்கும். இது அப்படியே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
தவிர விக்கிபீடியாவில் யாரும் உரிய தரவுகளோடு தகவல்களை பதியலாம். ஆகவே விக்கிபீடியாவுக்கு தனிப்பட்ட நோக்கம் இல்லை. வேண்டுமென்றே இதுபோல செய்வதற்கு வாய்ப்பு இல்லை” என்றார்கள்.
அதே நேரம், “வால்மீகி ராமாயணத்தை தமிழில் அளித்த கம்பர் தமிழ் மரப்படி பல மாற்றங்களைச் செய்தார்.
இராவணன் சீதையைக் கைகளால் பற்றித் தூக்கிச் சென்றதாக வால்மீகர் எழுதியுள்ளார். ஆனால் கம்பர், பஞ்சவடியில் பர்ணசாலையில் இருந்த சீதையை அந்தக் குடிசை தரையோடு வருமாறு பெயர்த்து எடுத்துச் சென்று இலங்கையில் அசோகவனத்தில் சிறைவத்தான் என்று கூறியுள்ளார்.
அதே போல, வாலி இறந்த பிறகு அவனுடைய மனைவி தாரையைச் சுக்கிரீவன் தன் மனைவியாகக் கொண்டான் என்பது வால்மீகி இராமாயணத்தில் உள்ளது. ஆனால் கம்பர் இதை மாற்றி தமிழில் தந்திருக்கிறார்.
ஆகவே ஆங்கில மூலத்தை அப்படியே விக்கிபீடியா கடைபிடிக்காமல், தமிழுக்கு ஏற்ற வகையில் மாற்றத்தை செய்ய வேண்டும்” என்கிறார்கள் விமர்சனம் செய்பவர்கள்.
மிக பயனுள்ள தளமான விக்கிபீடியா, இந்த தவறை சரி செய்யும் என்று நம்புவோம்.