லண்டன்: கிரிக்கெட் போட்டிகளின்போது மழை வந்தால் அதை சமாளிக்கத் தடுமாறும் இங்கிலாந்தின் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த விஷயத்தில், இலங்கை மற்றும் இந்திய நாடுகளை, கிரிக்கெட்டின் தாயகம் என்று போற்றப்படும் இங்கிலாந்தால் ஏன் பின்பற்ற முடியவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மழை வரும்போது மைதானத்தின் நடுப்பகுதியை மட்டுமே மூடிவைத்துவிட்டு, பின்னர் மற்ற பகுதிகளில் உள்ள தண்ணீரை வெளியே எடுத்து, மைதானத்தை சரிசெய்வது பழைய முறை.

ஆனால், மழை வந்தால் மைதானம் முழுவதையுமே அதிக ஊழியர்களை வைத்து, சிறிதுநேரத்தில் மொத்தமாக மூடிவிட்டு, பின்னர் மழை நின்றவுடன் எளிதாக விளையாட்டை துவக்கும் ஒரு முறையை முதன்முதலாக இலங்கைதான் அறிமுகம் செய்தது.

பின்னர், அதை இந்தியாவும் பின்பற்றத் தொடங்கியது. ஆனால், இங்கிலாந்து போன்ற ஒரு முக்கியமான நாடு, இந்த விஷயத்தில் இன்னும் கத்துக்குட்டித்தனமாகவே இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த உலகக்கோப்பை குறித்து மிகவும் ஆர்வமுடன் இருக்கும் ரசிகர்கள், மழையால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல போட்டிகள் ரத்தாவதை கொஞ்சமும் விரும்பவில்லை என்பதே நாம் அனைவரும் அறிந்த விஷயம்.