சென்னை: கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இந்த மாத இறுதிக்குள் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று கூறினார்.
ஏற்கனவே கடலூர் கட்சி மாநாட்டில் அறிவிப்பேன் என்றவர், அதை செய்யாமல் பின்வாங்கிய நிலையில், தற்போது இந்த மாத இறுதிக்குள் கூட்டணி அறிவிக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தேமுதிக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ், இளைஞர் அணி செயலாளர் விஜயபிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் மகளிர் அணியினருடன் பிரேமலதா இணைந்து பொங்கல் வைத்தார். தொடர்ந்து உறியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா, சமீபத்தில் கடலூரில் நடைபெற்ற மாநாட்டை வெற்றி பெறவைத்த தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து, தொண்டர் விரும்பும் வெற்றி கூட்டணியை தேமுதிக அமைக்கும் என தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், இந்தப் பொங்கல் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை நிச்சயமாக உருவாக்கும். இந்த தேர்தலுக்கு பின் அமையும் ஆட்சி மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது விளைவிக்கும். கூட்டணி குறித்து மாவட்ட செயலாளர்கள் அவர்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர். நாங்கள் அதை கவனத்தில் எடுத்துள்ளோம். தேமுதிக நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது செய்கின்ற மகத்தான கூட்டணியை அமைக்கும்.
இந்த நேரத்தில் திமுக கூட்டணியில் ஏற்கனவே உள்ளவர்கள் தொடர்கிறார்கள், புதிதாக யாரும் இணையவில்லை. அதிமுக கூட்டணியிலும் இன்னும் யார் உள்ளார்கள் கூறவில்லை, இவ்வாறு இரண்டு கூட்டணியும் இன்னும் உறுதியாகவில்லை. அப்படி இருக்கும்போது சிறிது சிந்தித்து ஒரு தெளிவான நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூறியுள்ளனர்.
நிச்சயம் ஒரு நல்ல முடிவை எடுப்போம். பொங்கலுக்கு பின் தமிழகத்தில் அரிய மாற்றங்கள் நிகழும். அந்த மாற்றங்கள் கூட்டணியை உறுதி செய்யும். தேமுதிகவில் யார் போட்டியிடுவார்கள், எங்கு போட்டியிடுவார்கள் என்பது குறித்து கூட்டணி அமைந்தவுடன் முடிவு செய்யப்படும்.
அடுத்த மாதம் நான்காம் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளோம், விருப்ப மனுக்கள் பெற வேண்டும். இவ்வாறு பல வேலைகள் உள்ளது. ஜனவரி மாதத்துக்குள் கூட்டணி இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்கள், தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு அறிவித்துள்ளது. அதேபோல இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவெற்றி அவர்களின் போராட்டத்தையும் முடித்து வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
[youtube-feed feed=1]