டில்லி
வங்கியில் அதிக அளவில் கடன் வாங்கி விட்டுத் திருப்பி செலுத்தாதோர் யார் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
வாராக்கடன் காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. அந்த வங்கியின் இயக்குநர்கள் குழுவைக் கலைத்த ரிச்ர்வ் வங்கி நிர்வாக பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது நிதி நெருக்கடி காரணமாக முதலீட்டாளர்கள் ரூ.50000 வரை மட்டுமே பணம் எடுக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த்தாக மேலும் பல வங்கிகள் மூடப்படலாம் எனப் பீதி எழுந்துள்ளதால் பலரும் தங்கள் வங்கியில் உள்ள பணத்தை எடுத்து வருகின்றனர். இதையொட்டி ரிசர்வ் வங்கி மக்கள் அவ்வாறு பணம் எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்றைய நாடாளுமன்றத்தில் இது குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசி உள்ளார்.
ராகுல் காந்தி, “வங்கிகள் சரிந்துக் கொண்டு வருகின்றன. மேலும் பல வங்கிகள் சரியலாம் என அச்சம் எழுந்துள்ளது. இந்தியாவில் உள்ள வங்கிகளில் அதிக அளவில் கடன் வாங்கி செலுத்தாதோர் பட்டியலில் முதலில் உள்ள 50 பேர் யார் யார்? இதுவரை யாருடைய பெயரும் வரவில்லை.
பிரதமர் மோடி வங்கியில் இருந்து பணத்தைச் சுரண்டியவர்களை பிடிப்போம் எனவும் அவர்களைச் சிறையில் தள்ளுவோம் எனவும் ஏற்கனவே தெரிவித்துள்ளார் அதனால் அவர்கள் யார் என்பதையும் அவர்களுடைய பெயர்கள் என்ன என்பதையும் நான் கேட்கிறேன்” எனப் பேசி உள்ளார்.