சண்டிகர்
மொகாலியில் கிரிக்கெட் போட்டி வைக்கக் கூடாது என பிசிசிஐ அறிவித்தமைக்கு பஞ்சாப் முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் விரைவில் 14 ஆம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. ஐபிஎல் போட்டிகள் நாட்டின் பல நகரங்களிலும் நடைபெறுவது வழக்கமாகும். சென்ற வருடம் கொரோனா தொற்று அபாயம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் துபாயில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டன. எனவே இந்த வருடம் இந்தியாவில் நடைபெறும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாது என பிசிசிஐ அறிவித்தது. இதற்கு இரு முக்கிய காரணங்கள் தெரிவிக்கப்பட்டன. அதில் ஒன்று விவசாயிகள் போராட்டம் காரணமாகக் கலவரங்கள் வெடிக்கலாம் என்பதாகும். மற்றொரு காரணம் கொரோனா தொற்று இங்கு அதிகரிக்கும் என்பதாகும்.
இதையொட்டி பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் போராட்டத்தில் கலவரங்கள் நிகழாமல் முழு பாதுகாப்பையும் அரசு அளிக்கும் என உறுதி அளித்தார். மேலும் கொரோனா வைரஸ் தொற்றாமல் தடுக்க தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார். எனவே மொகாலியில் போட்டிகள் நடக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் பிசிசிஐ மீண்டும் கொரோனா தொற்று காரணமாகப் போட்டிகள் நடத்த இயலாது எனத் தெரிவித்துள்ளது. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், “ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ மும்பை நகரில் நடத்தலாம் என அறிவித்துள்ளது. அங்கு தினசரி 9000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.
அவ்வாறு இருக்க மொகாலியில் ஏன் கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது. நாங்கள் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளோம் என உறுதி அளிக்கிறேன். எனவே பிசிசி ஐ தனது முடிவை மீண்டும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என அறிவித்துள்ளார்.