சென்னை,

ரெங்கும் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் துணிகடைகள் கடந்த ஒரு மாதமாக மக்கள் நெருக்கம் காரணமாக திணறி வந்தது. தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகள் மக்கள் நெருக்கடி காரணமாக போக்குவரத்தே திணறியது.

ஆனால், தமிழக அரசின் கைத்தறி துணி நிலையங்கள் அமைந்துள்ள எழும்பூர் பகுதி மக்கள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடியே காணப்பட்டது.  பிரதான சாலைகள் எல்லாம் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் வேளையில்,  கூட்டுறவு கைத்தறி நிறுவனக் கடைகள் காத்து வாங்கிக்கொண்டு வெறிச்சேடி கிடந்தது.

ஒரு காலத்தில் பட்டுப்புடவை என்றாலே கோஆப்டெக்ஸ் நோக்கி ஓடிவந்த மக்கள் இன்று அந்த பகுதிக்கே வர தயங்குவதற்கு என்ன காரணம் ….?

 

எழும்பூர் கோஆப்டெக்ஸ் வளாகத்தில்  உள்ள  பெரும்பாலான கடைகள் சரிவரி திறக்கப்படுவதில்லை. மேலும், கதற்துணிகள் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு சென்றால் அவர்களுக்கு தேவையானது என்ன என்பது குறித்து கேட்கவோ, அதை எடுத்துக்கொடுக்கவோ யாரும் முன்வருவதில்லை.

அங்குள்ள கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் துணிகளும் பெரும்பாலும் ஒழுங்காகவோ, பார்வையாளர்களை கவரும் வகையிலோ அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதில்லை. அதே நேரத்தில் வாடிக்கையாளர்களின் கேள்விக்கு சரியான பதில்களை கூட அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் யாரும் தர முன்வருவதில்லை….

இதற்கு என்ன காரணம்? அரசு சார்பாக நடத்தப்படும் இந்த கடைகள் சரியான முறையில் பராமரிக்கப்படாதது முதல் காரணம். இரண்டாவதாக, அங்கு உள்ள ஊழியர்களுக்கு அரசு சம்பளம். எனவே, வியாபாரம் நடைபெற்றாலும், நடைபெறாவிட்டாலும் அவர்களுக்கு கவலையில்லை. சம்பளம் கரெக்டராக வந்துவிடும். எனவே, தனியார் நிறுவனங்கள்போல விற்பனையை அதிகரிக்க அவர்கள் முன்வருவதில்லை.

மேலும் துணிகள் வாங்க வரும் வாடிக்கையாளர்களை அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் மதிப்பது கிடையாது. இதன் காரண மாகவே அந்த நிறுவனங்களில் வியாபாரம் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது. மேலும், இதுபோன்ற கதர் நிறுவனங்களில் பணியாற்ற தேவையான பணியாளர்களும் இல்லை.

சமீபத்தில் எழும்பூர் பகுதியில் உள்ள கோஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு துணி எடுக்க சென்றிருந்தோம். கடை பெரியதாகவே இருந்தது. ஆனால் பணியில் ஒரே ஒரு வயதான பெண்மணி மட்டுமே அமர்ந்திருந்தார். அவரிடம் வேறு யாரும் இல்லை என்று கேட்டதற்கு, இரண்டு பேர் இங்கு பணியாற்றுவதாகவும், அதில் ஒருவர் விடுமுறை எடுத்துள்ளதால் தான் மற்றுமே பணியாற்றுவதாக கூறினார்.

மேலும், நீங்கள் அரசு ஊழியரா என்று கேட்டுவிட்டு, தேவையானதை நீங்களே எடுத்துக்கொண்டு வாருங்கள், பில்போட்டு தருகிறேன் என்று கூறினார். ஏன் வேறு ஆட்கள் நியமிக்கப்படுவதில்லையா என்று கேட்டதற்கு, இங்கு புதிய ஆட்கள் நியமனம் என்பது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே நின்றுவிட்டது. இருந்த ஒருசிலரும் ஓய்வு பெற்றுவிட்டதால் ஆட்கள் கிடையாது என்றும், நான் இன்னும் ஒரு வருடத்தில் ஓய்வுபெற்று விடுவேன்.. அதன்பிறகு ஆட்கள் நியமனம் செய்வார்களா, மூடுவார்களா என்பது தெரியவில்லை என்றார்.

தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமே இங்கு துணிஎடுக்க வருகிறார்கள். காரணம், அவர்கள் எடுக்கும் துணிக்கு 6 மாத தவணை முறையில் பணம் செலுத்தும் வசதி உள்ளது. எனவே அவர்களை தவிர வேறு யாரும் இங்கு வர விரும்புவதில்லை. ஆகவே பெரும்பாலான நேரங்களில் நாங்கள் சும்மாதான் இருக்கிறோம்… என்றார்.

ஒரு காலத்தில் பட்டுப்புடவைகள் என்றாலே கோஆப்டெக்ஸ்தான் என்று அனைவரும் விரும்புவார்கள். ஆனால், தற்போது அதே கோஆப்டெக்ஸ் வெறிச்சோடி போனது.  ஏன்?  புதிய வகையான பட்டுக்கள் அறிமுகப்படுத்தப்படுவதில்லை.. புதிய ரக சேலைகள் விற்பனைக்கு வைக்கப்படுவதில்லை. காலங்கள் மாறி வருகின்றன அதற்கேற்றார் போல் உடைகளும் மாறுகின்றன. ஆனால், அரசு கதர்வாரிய கடைகள் மட்டும் தங்கள் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை….

அரசும், கதர் நிறுவனமும் கடைகளை சரிவரி பராமரிப்பு, நடப்பு காலத்திற்கு ஏற்றவாறு துணிகளை விற்பனைக்கு வைத்தும்,  தகுந்த விற்பனை பிரதிநிதிகளை நியமித்தால் மட்டுமே விற்பனையை உயர்த்தி முடியும். தள்ளுபடி மட்டுமே பயன் தராது என்பதை அரசும், கதர் வாரியமும் உணர்ந்து ஆவன செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

இதுகுறித்து, முகநூலில் கலாரஸிகன் கரிகாலன் பதிவிட்டிருப்பதாவது,

இடதுபுறம் வளாகத்தில் சரிபாதி கூட்டுறவு சங்கக் கடைகள் திறக்கப்படவில்லை. திறந்திருந்த கடைகளில் நுகர்வோர் யாரும் இல்லை. நம்ம வடசேரி கடை கூட திறக்கப்படவில்லை. வழக்கமாக வடசேரி கடையிலும் ஆந்திரா கடை ஒன்றிலும் வண்ண நிற வேஷ்டி வாங்குவேன். இம்முறை இரண்டுமே இல்லை.

வலது பக்கம் தெரு முழுவதும் கடைகள். மலிவு விலையில் அங்குதான் நான் துணி வாங்கி ஜிப்பா தைப்பேன். அங்கும் கடைகள் வெறிச்சோடி இருந்தன. பல கடைகளை மறைத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

தில்லையாடி வள்ளியம்மை கட்டிடத்தில் மட்டும் ஏதோ சிலர். மந்தமான வியாபாரம். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு சென்ற எனக்கு ஏமாற்றம் அதிகம்.