டெல்லி: பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியின் வேட்புமனுவை தள்ளுபடி செய்யுமாறு திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க சட்டசபை தேர்தல் வரும் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக நடக்கிறது. அதில் போட்டியிட, நந்திகிராம் தொகுதியில் மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அவருக்கு எதிராக திரிணமூல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல் செய்தார். இந் நிலையில், சுவேந்து அதிகாரியின் வேட்புமனுவில் அவரது வீடு குறித்த தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதால், அதனை தள்ளுபடி செய்யக்கோரி திரிணமூல் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மமதாவின் வேட்புமனுவில் 6 வழக்குகள் குறித்து தகவல் தெரிவிக்கப்படாததால், அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்யுமாறு சுவேந்து அதிகாரி கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.