சென்னை: 10ஆண்டு அதிமுக ஆட்சியில் செய்யாததை ஒரு ஆண்டில் செய்துள்ளோம் என முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க தமிழகஅரசு எடுத்த பணிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மழை நீர் தடுப்பு தொடர்பாக, மாநகராட்சி, தமிழக அரசு என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மை அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.  அப்போது, அங்குள்ள அலுவலர்களிடம்  மழை பாதிப்பு பற்றிய புகார்கள் குறித்து விவரங்களை அவர் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் இருப்பு விவரங்களையும் முதல்வர் ஆய்வு செய்கிறார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முலமைச்சர்,  அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டு காலமாக சென்னை மட்டுமல்ல தமிழ்நாடே மழை பாதிப்பால் சீரழிந்து உள்ளது.  ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஓரு ஆண்டில் அதை  சரி செய்துள்ளோம், அதனை சரிப்படுத்த சில வருடங்கள் ஆகும். அதனை நாங்கள் (திமுக ஆட்சி) ஒன்றரை வருடத்தில் சரி செய்து வருகிறோம்,  முழுமையாக சீரமைப்போம் என்று நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார்.

வடசென்னையில் மழைநீர் தேங்கி இருப்பதை பற்றி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின், அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் சீர் செய்யப்படும் என தெரிவித்தார்.