மும்பை
மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளிடையே மோதல் அதிகரித்து வருகிறது.
நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்துள்ளது. ஆயினும் இரு கட்சிகளுக்கிடையே உள்ள அதிகார ஆசையால் அரசு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதே வேளையில் அரியானா மாநிலத்தில் தனிப் பெரும்பான்மை பெறாத பாஜக துஷ்யந்த் சவுதாலாவின் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் அமைச்சரவையில் சிவசேனா கட்சி 50% பங்கு மற்றும் முதல்வர் பதவி ஆகியவற்றைக் கோரி உள்ளது. ஆனால் பாஜக அமைச்சரவையில் சரி பாதி பங்கு அளிக்கத் தயாராக உள்ள போதும் முதல்வர் பதவியை விட்டுத் தர ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் இழுபறி நிலவி வருகிறது.
இந்நிலையில் மூத்த பாஜக தலைவர் ஒருவர் அரியானாவில் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ள துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவி அளித்ததைச் சுட்டிக் காட்டி பேசி உள்ளார் இது சிவசேனா கட்சியினருக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவசேனா கட்சி செய்தி தொடர்பாளர் சஞ்சய் ரவுத், “நாங்கள் துஷ்யந்த சவுதாலா இல்லை எங்கள் தந்தை சிறையில் இல்லை. நாங்கள் மகாராஷ்டிராவில் உண்மையான அரசியலைச் செய்து வருகிறோம்.
எங்களை ஆட்சியில் இருந்து தள்ளி வைக்க முயற்சி செய்தால் அது உண்மையான அரசியல் ஆகாது. நாங்கள் என்ன நடக்கிறது என்பதையும் மக்கள் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்துக் கொள்கிறார்கள் என்பதையும் கவனித்து வருகிறோம்” எனக் கூறி உள்ளார்.