மேட்டூர்
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன. அணையின் பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து 1 லட்சத்து 66 ஆயிரத்து 234 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
என்வே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 1.47 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் 109.20 அடியாகவும், நீர் இருப்பு 77.27 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
, மேட்டூர் அணை நீர் திறப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துவருவதால் எப்போது தண்ணீர் திறக்கலாம்?, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தற்போது முதல்வர் உத்தரவின்பேரில் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரு தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். இதில் முதற்கட்டமாக 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு நீர்வரத்தைப் பொறுத்து நீர்திறப்பின் அளவு அதிகரிக்கக் கூடும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைக்க நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.