ஐதராபாத்: இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில், ஷிகர் தவானை, ரிசர்வ் தொடக்க வீரராகவே வைத்திருக்க வேண்டும், அதாவது பெஞ்சில் அமர வைக்க வேண்டுமென்று ஆலோசனை கூறியுள்ளார் இந்திய முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மண்.
அவர் கூறியுள்ளதாவது, “ஷிகர் தவன் தற்போது உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அவரை டி-20 உலகக் கோப்பைக்கான ரிசர்வ் தொடக்க வீரராகவே வைத்திருக்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 தொடரில் ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக தவனுடன், கே.எல்.ராகுல் களமிறங்கினார். இப்போது ரோஹித் ஷர்மா வந்துவிட்ட நிலையில் மீண்டும் தவன், ரோஹித் ஷர்மா கூட்டணியைக் களமிறக்குவது சரியான தேர்வு இல்லை.
யாரைத் தேர்வு செய்வது என்பது கடினமான கேள்விதான் என்றாலும், வலிமையான தொடக்கத்துக்கு கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மாதான் சரியாக இருக்கும். ஷிகர் தவனை ரிசர்வ் ஓப்பனராகவே வைத்திருக்கலாம்.
ரோஹித் ஷர்மாவைப் பொறுத்தவரை டி-20, ஒருநாள் தொடரில் சிறந்த தொடக்க வீரர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதிரடியான தொடக்கத்துக்கு ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுலுடன் சேர்ந்து களமிறங்குவதுதான் சரியானதாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக ராகுலின் தொடக்க ஆட்டம் பிரமாதமாக இருந்து வருகிறது.
ஐபிஎல் தொடரில் தவன் சிறப்பாக ஆடினார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக சதம் அடித்தார். விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால், உலகக் கோப்பைப் போட்டிக்கு ரிசர்வ் ஓப்பனரை மனதில் வைத்து ஷிகர் தவனை களமிறக்குவதைத் தவிர்க்க வேண்டும். இதில் ராகுல், ரோஹித் ஷர்மா யாரேனும் ஒருவர் ஃபார்மை இழக்கும் பட்சத்தில் அல்லது காயமடைந்தால் ஷிகரைப் பயன்படுத்த வேண்டும்.
பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் மீண்டும் வந்திருப்பது அணியின் பந்துவீச்சை பலப்படுத்தும், இன்னும் வலிமையாக்கும். ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு பலத்தையும், துணிச்சலையும் அனைவரும் பார்த்திருப்போம்.
புவனேஷ்வர் உடல்நலம் தேறி வந்திருப்பது மகிழ்ச்சிதான். முக்கியமான பந்துவீச்சாளரான புவனேஷ்வர் குமாருக்கு டி-20 தொடர் முழுவதும் வாய்ப்பு வழங்காமல் 2 அல்லது 3 போட்டிகளில் மட்டுமே களமிறக்க வேண்டும். அடுத்ததாக நமக்கு உலகக் கோப்பை டி-20 தொடர் நடக்க இருப்பதால், அதை மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்.
இந்திய அணியில் பும்ராவைத் தவிர்த்து புதிய பந்தில் டெத் பவுலிங் வீசவும், துல்லியமாக ஸ்விங் செய்யவும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் யார் எனக் கேட்டால் புவனேஷ்வர் குமார்தான். ஆதலால், அவருக்கு முழு பளு அளிக்காமல் 3 போட்டிகளில் மட்டுமே களமிறக்க வேண்டும். அக்டோபர், நவம்பரில் நடக்கும் உலகக் கோப்பையை மனதில் வைத்து இந்த முடிவை அணி நிர்வாகம் எடுக்க வேண்டும்” என்றுள்ளார் விவிஎஸ் லட்சுமணன்.