விருதுநகர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் மட்டும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயில் பிரசித்தி பெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த கோவிலில் சுந்தர மகாலிங்கப் பெருமானார் குடிகொண்டுள்ளார். மேலும், இந்த மலையானது சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகை வனம் என்று பெரியோர்களால் போற்றப்படுகிறது
இக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப் பட்டு வருகிறது. ஆனால், இயற்கை சீற்றம் மற்றும் மழைக்காலங்களில் சூலுநிலையைப் பொறுத்தே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த மாதம் வைகாசி மாத பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு, நாளை முதல் 4 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 15-ம் தேதி வைகாசி மாத பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு நாளை (13-ம் தேதி /வெள்ளிக்கிழமை) முதல் 16-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) வரை சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்த்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலைக்கு செல்ல தடை விதிக்கப்படும் எனவும், பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
- மலையேற வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.
- காய்ச்சல் உள்ளவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.
- 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் மலையேற அனுமதி இல்லை.
- காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும்.
- வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல கூடாது.
- இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.