மதுரை: திருச்செந்தூர் கோயிலில் விஐபி, அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பணம் கொடுத்து என பலர் அதிகாரிகள் துணையோடு கோவிலுக்குள் கூட்டம் கூட்டமாக செல்வதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல மணி நேரம் கியூவில் கால்கடுக்க நிற்கும் நிலை உள்ளது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, அறநிலையத்துறை அதிகாரிகளை கடுமையாக சாடியது. அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், விஐபிகளுக்காக பக்தர்கள் காத்திருக்க வேண்டுமா?” பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

திருச்செந்தூர் கோவில் புணரமைப்பு மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு, கோவிலின் பழமை பல பகுதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், கோவிலில் சாமி தரிசனம் வரும் பக்தர்களை அறைக்குள் அடைத்து வைத்து பல மணி நேரம் காக்க வைக்கும் சம்பவங்களும் முருக பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதுமட்டுமின்றி பக்தர்கள் முருகனை கான பல மணி நேரம் காத்திருக்கும் நிலையில், கோவில் அதிகாரிகளும், பூசாரிகளும், பணக்காரர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு, விஐபி தரிசனம் என்ற பெயரில் முறைகேடாக சாமி தரிசனத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். இதுமட்டுமின்றி, அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் குறிப்பாக ஆளும் கட்சியினர், விஐபிகள் என பலரும் தங்களுடைய ஐடி கார்டுகளை காண்பித்து, கோவிலுக்குள் செல்கின்றனர். இதனால் கியூவில் நிற்கும் சாமானிய மக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, திருச்செந்தூரை சேர்ந்த சிவசுப்பிரமணியபட்டர் மற்றும் 11 பட்டர்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘ஸ்ரீவைகுண்டம் முதன்மை மாவட்ட முன்சீப் நீதிமன்றம் 1991ல் பிறப்பித்த உத்தரவு, அறநிலையத்துறை ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் முறையே 2004, 2005-ல் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் கோயிலில் அர்ச்சனை, ஆராதனை, பூஜை உள்ளிட்ட கைங்கரியங்களில் எங்கள் குடும்பத்தினரை அனுமதிக்க உத்தரவிட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, “இந்த வழக்கு திருச்செந்தூர் கோயில் பட்டர்களுக்கும், திரி சுதந்திரர்களுக்கும் இடையிலான பிரச்சனை தொடர்பானது. பக்தர்களின் நலனைப் பாதிக்கும் வகையில் பல்வேறு பிரச்சனைகள் இதில் உள்ளது. ஆகையால் கோயில் நிர்வாகம் சில கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
விஐபிகளுக்காக பக்தர்கள் காத்திருக்க வேண்டுமா?” விஐபி தரிசனத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறதா எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் செய்ய என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?
குருவாயூர், திருப்பதி கோயில்களில் இருப்பதுபோல் திருச்செந்தூர் கோயிலுக்குள் இரும்பு மேம்பாலம் அமைத்து கடிகாரம் சுற்றும் திசையில் பக்தர்களின் வரிசையை சீரமைக்க முடியுமா?
தற்போதுள்ள ஏற்பாடுகளால் கடிகாரம் சுற்றும் திசையில் பக்தர்கள் செல்ல முடியாது என்பது உண்மையா?
கோயிலில் விஐபி அல்லது விவிஐபி தரிசனங்களை அனுமதிப்பதால், பொது பக்தர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டுமா?
கோயில் நிர்வாகம் விஐபி, விவிஐபி தரிசனத்துக்கு தனி நேரம் ஒதுக்க விரும்புகிறதா?
உண்மையெனில் இதைத்தடுக்க கோயில் நிர்வாகம் என்னென்ன நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது?
விஜபிக்கள் தரிசனத்தின்போது பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்படுவதால், விஐபி தரிசனத்திற்காக பக்தர்களின் வரிசை நிறுத்தப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடு செய்ய முடியுமா?
கோயிலுக்கு வரும் பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்கவும், பக்தர்களுக்கு சிரமங்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் தனி திட்டம் வகுப்பது தொடர்பாக கோயில் நிர்வாகம் ஆலோசித்துள்ளதா?
பக்தர்கள் வரிசை நகர்வு தடைபடாத வகையில், இலைகளில் விபூதி உள்ளிட்ட பிரசாதம் விநியோகிக்கப்பட வேண்டும் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதா?
தற்போது கோயில் உட்பிரகாரத்தில் பிரசாதம் விநியோகம் செய்யப்படுகிறதா?
திருசுதந்திரர்கள் – பட்டர்கள் – ஸ்தானிகர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குவதற்கான திட்டம் உள்ளதா?
கோயிலில் இவர்களின் முறை வராதபோது, இவர்கள் வரிசையை கடந்து பக்தர்களை அழைத்து செல்வதை அனுமதிக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய திட்டம் உள்ளதா?
போதுமான கழிப்பறை வசதிகள் உள்ளதா?
போன்ற கேள்விகளுக்கு கோயில் நிர்வாகம் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.