சேலம்: பிப்ரவரி 13 ஆம் தேதி சேலத்தில் விஜய் தலைமையில்  த.வெ.கவின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு சேலம் மாநகர காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளுடன்  அனுமதி வழங்கி உள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு, மாநகர காவல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சேலத்தில் மேற்கொள்ளவிருக்கும் மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சாரக் கூட்டத்திற்குச் சேலம் மாநகர காவல் துறை அதிகாரப்பூர்வ மாக அனுமதி அளித்துள்ளது. சேலம் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ள தாளமுத்து நடராஜன் திடலில் இந்தப் பிரசாரக் கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காகத் த.வெ.க நிர்வாகிகள் முன்னதாக விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி கிடைத்துள்ளது.

முன்னதாக, மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள காளிகவுண்டம்பாளையம் திடலில் கூட்டத்தை நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. பின்னர், சீலநாயக்கன்பட்டி திடலில் கூட்டத்தை நடத்த அனுமதி கேட்டு மாநகர காவல் ஆணையரிடம் மீண்டும் மனு அளிக்கப்பட்டது. முதலில் அரசு வழிகாட்டுதல்களைச் சரியாகப் பின்பற்றவில்லை என்ற காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தை நடத்துவதற்குப் பல முக்கிய நிபந்தனைகளைச் சேலம் காவல் துறை விதித்துள்ளது. குறிப்பாக, கூட்டத்தில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதைத் த.வெ.க நிர்வாகிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், கூட்டத்திற்கு வருபவர்கள் அனைவருக்கும் முறையாக டோக்கன் வழங்கப்பட வேண்டும் என்றும், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்புக் கருதி கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால நேரத்தைப் பொறுத்தவரை, வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி அன்று மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே இந்தக் கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. குறைந்த நேரமே ஒதுக்கப்பட்டுள்ளதால், த.வெ.கவினர் அதற்கான முன்னேற்பாடுகளைத் தீவிரமாகச் செய்து வருகின்றனர். பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறைகளைக் கருத்தில் கொண்டு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

[youtube-feed feed=1]