சென்னை: தவெக தலைவர், வேங்கைவயல் விவகாரம் மற்றும் திமுகவின் அரசியல் குறித்து விமர்சனம் செய்த நிலையில், அரசியல் களத்திற்கே வராதவர்கள் அதிமேதாவி களாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என திமுக அமைச்சர் சேகர்பாபு நடிகர் விஜயை விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் நேற்று ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில், தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், முன்னான் நீதிபதி நீதிபதி சந்துரு, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலை விஜய் வெளியிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் “மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய இயலாத கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி இருமாப்புடன் இருநூறு வெல்வோம் என எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்துவரும் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026-ல், மக்களே மைனஸாக்கி விடுவார்கள்.” என்று திமுகவை சாடி பேசினார். மேலும் திமுகவின் பரம்பரை அரசியல் மற்றும் வாரி அரசியலை கடுமையாக விமர்சனம் செய்ததுடன், வேங்கைவயல் சம்பவத்தை சுட்டிக்காட்டி, இதுதான் சமதர்மமா என கேள்வி எழுப்பினார். விஜயின் பேச்சு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், விஜயின் பேச்சு திமுக தரப்பில் இருந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். அதில், “200 தொகுதி என்கிற எங்களின் நம்பிக்கை வீணாகும் தமிழகத்தின் அரசியல் தெரியாமல் இருக்கும் சிலர் பேசி வருகிறார்கள், என்றவர், அதிமேதாவிகளாக களத்திற்கே வராதவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று விமர்சித்ததுடன், 2026 தேர்தலில் 200 அல்ல 234 தொகுதிகளிலும் திமுக கைப்பற்றும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பது மக்களின் நிலைப்பாடு. அதில், யாராவது குறையும் என்று நினைத்தால் அது பகல் கனவாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.