சென்னை: விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், படத்தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷசன்ஸ் வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் கூறியது. இதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பாக மறு ஆய்வு குழுவை அணுகி உள்ளதால், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை திரும்பப் பெறுவதாக கூறி பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் அளித்தது. இதையடுத்து, வழக்கு தனி நீதிபதி முன், ‘வாபஸ் பெறுவதற்காக’ என்ற தலைப்பில் இன்றைய விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
இந்த நிலையில், இன்று தனிநீதிபதி பி.டி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று , மனுவை திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.
ஜன நாயகன் திரைப்படம் முதலில் 2025-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் பொங்கல் வெளியீடாக படம் வர இருந்தது. 2026ம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு படத்திற்கான முன்பதிவும் சில இடங்களில் தொடங்கின. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக உள்ள நடிகர் விஜய், ஜன நாயகன் திரைப்படம் தான் தனது கடைசி படமாக இருக்கும் என அறிவித்திருந்தார். ஆனால் படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சான்று கிடைப்பதற்கு தாமதமானதால் படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி பி.டி ஆஷா, படத்தை வெளியிட அனுமதி வழங்கினார். ஆனால், சென்சார் போர்டு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், படம் வெளியிட தடை விதித்ததுடன், வழக்கை மீண்டும் விசாரிக்க தனி நீதிபதிக்கு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, படத்தை சென்சார் போர்டின் மறுஆய்வு தயாரிப்புநிறுவனம் அனுப்பி வைத்தது. இதையடுத்து, மனுவை வாபஸ் பெற அனுமதி கோரிய நிலையில், அதற்கு அனுமதி வழக்கிய தனிநீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஜனநாயகன் படத்தை தயாரித்தது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கே.வி.என் புரொடக்ஷன்ஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பான முதல் தமிழ் படமான விஜய் நடித்த ஜனநாயகன் சர்ச்சையில் சிக்கி உள்ளது. பெங்களூருவில் உள்ள கே.வி.என் புரொடக்ஷன்ஸ் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் 2020 ஆம் ஆண்டு வெங்கட் கே. நாராயணா மற்றும் நிஷா வெங்கட் கோணங்கி ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் படங்களைத் தயாரித்து வருகிறது.